கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி… – ஏசாயா 58:11

அநேக கிறிஸ்தவர்கள், தேவன் தங்களோடு இராவிட்டால், அவருடைய ஆசீர்வாதங்களையும், வாக்குத்தத்தங்களையும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதனால், ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதையும், ஜெபங்களுக்குப் பதில் கிடைப்பதையுமே தேவன் தங்களோடு இருக்கிறதற்கு அடையாளமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், பலமுறை பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய பாவங்களைக் குறித்து எச்சரித்தும், ஒரு ஆசீர்வாதம் வந்த உடனே, தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் பாவங்களை அறிக்கை செய்து, தங்களைத் தாழ்த்தி, கிறிஸ்து இயேசு மூலமாய் தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் போகிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால், கர்த்தர் இதை பாவமாக கருதியிருந்தால், எங்களுக்குள் பாவம் இருந்திருந்தால், இந்த ஆசீர்வாதம் எப்படி எங்களுக்கு வந்து சேரும்?

யாத்திராகமம் 33-ஆம் அதிகாரத்தில், கர்த்தர் மோசேயிடம் வாக்குத்தத்த தேசத்தை தருவதாகவும், இஸ்ரவேலருடைய சத்துருக்களையெல்லாம் அவர்களுக்கு முன்பாக சிதறடிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் தாம் அவர்களோடு  வருவதில்லை என்றும் சொல்கிறார். அதாவது, வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவேன்,  ஆசீர்வதிப்பேன், ஆனால் அவர்களோடு கூட இருக்க மாட்டேன் என்று கர்த்தர் சொல்கிறார்.

அதனால் தான் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதும், ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளங்கள் அல்ல. அப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் வந்து சேர்வது நாம் நல்லவர்கள் என்பதாலும் அல்ல. அது கர்த்தர் நல்லவர் என்பதற்கு மாத்திரமே அடையாளம். ஆகவே தான் பரலோக பிதாவை குறீத்து பேசும்போது, இயேசு கிறிஸ்து இப்படி சொல்கிறார்: அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மத்தேயு 5:45)

இதை உணர்ந்தவராய், மோசே, ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். கர்த்தர் தங்களோடு வரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாம் எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டோம், எத்தனை ஜெபங்களுக்குப் பதில் கிடைத்து இருக்கிறது என்பதை விட, கர்த்தர் நம்மோடு இருக்கிறாரா, அவர் நம்மை வழிநடத்துகிறாரா என்பதற்கே முக்கியம் தரவேண்டும். கர்த்தர் நம்மோடு இருந்தால், ஆசீர்வாதங்களும், வாக்குத்தத்தங்கள் நிறைவேறுதலும், ஜெபங்களுக்குப் பதில் கிடைத்தலும் கூடவே கிடைக்கும்.

இந்த புது வருடத்தில், கர்த்தர் நம்மை நித்தமும் நடத்த வாக்குப்பண்ணுகிறார். நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, அவருடைய கிருபையினாலே. மோசேயிடம் சொன்னதுபோல நம்மிடம் சொல்கிறார்: என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது. என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும். (யாத்திராகமம் 33:17) ஆனால் நல்லவர்கள் அல்லாத நமக்கு எப்படி கர்த்தருடைய கிருபை கிடைக்கிறது?

நம் மீட்பரும் இரட்சகருமாகிய கிறிஸ்து இயேசு நம் பாவங்களை எல்லாம் கல்வாரி சிலுவையில் சுமந்து தீர்த்ததினால், அவருடைய பரிபூரணத்தினால் கிருபைமேல் கிருபை பெற்றிருக்கிறோம். ஆகவே, இந்த புது வருடத்தின் தொடக்கத்தில் தானே, கல்வாரியை நோக்கிப்பார்ப்போம், நம் பாவங்களை அறிக்கையிடுவோம், பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோம், கிறிஸ்து இயேசு மூலமாய், தேவனுடைய மன்னிப்பைக் கேட்போம். அப்பொழுது அவர் கண்களில் நமக்குக் கிருபை கிடைக்கும். கர்த்தர் நம்மை நித்தமும் வழிநடத்துவார். அப்படியே ஆகட்டும். ஆமென்.

யாத்திராகமம் 33_17

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s