சமாதானத்தைத் தேடி…

சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். – சங்கீதம் 34:14

அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவராகிய பெஞ்சமின் ஃப்ராங்க்ளினை, ”அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் ஒரு ஏமாற்று வேலை” என்று சொல்லி ஒரு மனிதன் ஓயாமல் திட்டிக் கொண்டிருந்தான். “அரசியலமைப்புச் சட்டத்தில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சந்தோஷம் எங்கே?” என்று கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தான். ஒரு புன்னகையுடன், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்னார்: ”நண்பனே, அரசியலமைப்புச் சட்டம் உனக்கு சந்தோஷத்தைத் தேடுகிற உரிமையைத் தான் கொடுக்கிறது. நீ தான் சந்தோஷத்தைத் தேட வேண்டும்.”

சங்கீதம் 34:14-இல் கர்த்தருடைய வார்த்தையும் நமக்குச் சொல்கிறது: சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.

சங்கீதம் 34_14

உபத்திரவத்திற்கு முன்…

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். – சங்கீதம் 119:67

நான் வழிதப்பி நடந்தேன். இப்படி சொன்னாலே, இன்று கிறிஸ்தவ உலகம் கூட நம்மைத் தப்பாகப் பார்க்கும். ஏனென்றால், வழிதப்பி நடந்தேன் என்று சொன்னாலே, நாம் பிறரை ஏமாற்றி விட்டோம், திருடி விட்டோம், இச்சையோடு பிறரிடம் பழகினோம், விபசாரம் செய்து விட்டோம் என்று உலகத்தின் போக்கோடு மாத்திரம் பார்க்க நாம் பழகிக் கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் காட்டிலும் ஒரு மேலான தரம் உடையது.

உலகத்தின் பார்வையில் பாவம் என்று சொல்லப்படுகிற ஒன்றையும் நாம் செய்யாமல் இருக்கலாம். ஏன், இந்த உலகம் மெச்சிக்கொள்கிற காரியங்களை நாம் செய்து, உலகத்தால் பாராட்டப்படக் கூடிய ஒரு வாழ்க்கையைக்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும், நம்முடைய தேவனின் பார்வையில் நாம் வழிதப்பி நடக்கிறவர்களாக இருக்கலாம்.

ஏசாயா தீர்க்கதரிசி இதை அழகாக 53-ஆம் அதிகாரம், 6-ஆம்  வசனத்தில்  சொல்கிறார்.  நாம்  எல்லாரும்  வழிதப்பித் திரிந்தோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு  விளக்கமும்  தருகிறார். அவனவன் தன்தன் வழியிலே போனோம் என்று சொல்கிறார். தீய வழியில் போனோம் என்று சொல்லவில்லை, தன்தன் வழியிலே போனோம். மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவை விட்டு, நம் சொந்த வழிகளிலே போனோம்.

சிற்சில வேளைகளில், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு, நம் தவறை உணர்ந்தவர்களாய்,, அவருடைய வழிக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் போகும் பாதை நமக்குத் தவறாகத் தெரிவதில்லை; எல்லாரும் நாம் வாழ்கிற விதத்தைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் நன்றாக வாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை எல்லாம் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் பின்னே நடப்பது உலகத்தின் பார்வைக்கும், நம்முடைய பார்வைக்கும் கூட முட்டாள்த்தனமாகவேத் தெரியும். அந்த நேரங்களில், நம்முடைய பரம தகப்பன் தம்முடைய அன்பின் கரங்களால், நம்மை சற்று உபத்திரவத்திற்குள் நடத்தும்போது, நாம் அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறோம்.

பரலோக தகப்பனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக, கிருபைக்காக, நன்றி. நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தாலே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். எங்கள் வழிகளின் தவறுகளை நாங்கள் உணரும்படி, உம்முடைய அன்பினாலே, உபத்திரவங்களை எங்களுக்கு அனுமதித்தீரே, அதற்காகவும் நன்றி. இப்பொழுதோ நாங்கள் உம்முடைய வார்த்தைகளைக் காத்து நடக்கிறோம். நன்றி அப்பா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

சங்கீதம் 119_67

உமது நாமத்தை அறிந்தவர்கள்

உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். – சங்கீதம் 9:10

எங்கள் இரட்சகரே, இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உம்முடைய நாமத்தை அறிந்திருக்கிறோம். உம்மையே நாங்கள் நம்பி இருக்கிறோம். ஆமென்.

நாமம்

உமது வார்த்தையின்படி

நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். – சங்கீதம் 119:116

உமது வார்த்தையின்படியே, கர்த்தாவே, என்னை ஆதரித்தருளும். ஏனென்றால் உமது வார்த்தை மாறாதது. உமது வார்த்தை அழியாதது. இந்த உலகம் அழிந்து போகும். இதில் உள்ள யாவும் ஒருநாள் மாறிப்போகும். இதின் காரியங்கள் யாவும் உலர்ந்து போகும். ஆனால், தேவனே, உம்முடைய வார்த்தை மாறாது, அழியாது. அது என்றென்றும் நிலை நிற்கும். ஆகவே, ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும். நான் நிச்சயமாய்ப் பிழைப்பேன், ஏனென்றால் உம் வார்த்தை எனக்கு ஜீவன். நான் வெட்கப்படுவதில்லை. ஏனென்றால் உம் வார்த்தை சொல்கிறது: என் நம்பிக்கை வீண்போகாது. ஆகவே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். உம்முடைய வார்த்தையும் என் கர்த்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிமையும் செலுத்துகிறேன். ஆமென்.

சங்கீதம் 119_116

தேவனுடைய ஆவியினாலே

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். – சகரியா 4:6

ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை நம்முடைய பலத்தினாலோ, நம்முடைய பராக்கிரமத்தினாலோ, இல்லை, நம் தனிப்பட்ட ஒழுக்கத்தினாலோ வாழ்ந்து வெற்றி பெற முடியாது. சேனைகளின் கர்த்தருடைய ஆவியினாலே நாம் நடத்தப்படுகிற வாழ்க்கையே, உண்மையான ஜெயமுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையாகும். எதை சார்ந்து இருக்கிறோம்? நம்முடைய சொந்த முயற்சிகளையா, நம்முடைய பலத்தையா, பராக்கிரமத்தையா? அல்லது, சேனைகளின் கர்த்தருடைய ஆவியையா?

சகரியா 4_6

ஆவியானவர் நமக்கு உதவுகிறார்

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். – ரோமர் 8:26

நமது பலவீனங்களில். மூன்று காரியங்கள்.

  1. நம்முடைய பலவீனங்கள் எது என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அது தான் இருக்கிறதில் மிகக் கடினமான காரியம். நாம் நம்முடைய பலம் என்று கருதுகிற காரியங்கள் நம்முடைய பலவீனங்கள் என்று நாம் பிற்காலத்தில் உணர்கிறோம். பலவீனங்கள் என்று நாம் அசட்டை பண்ணுகிற காரியங்கள் நம்முடைய பலங்களாக இருக்கிறதைக் கண்டு வியக்கிறோம். ஆகவே, ஆரம்பத்திலேயே ஒரு பிரச்னை இருக்கிறது. எது என் பலவீனம்? ஆனால் ஆவியானவருக்கு என் பலவீனங்கள் நன்றாகத் தெரியும். உருவாக்கும் சிருஷ்டிகர்த்தாவுக்கு தெரியாதது ஒன்றும் இல்லையே.
  2. என் பலவீனங்களை நான் உணர்ந்தாலும் அதற்காக எப்படி ஜெபிப்பது என்று அநேக நேரங்களில் எனக்குத் தெரிவதில்லை. என்னைப் பொருத்தவரை இந்த பலவீனம் உடனே நீங்க வேண்டும். அதுதான் என் ஜெபமாக இருக்கும். ஆனால், இந்த பலவீனத்தை, சகலவற்றையும் நன்றாகப் படைக்கின்ற கர்த்தர் ஏன் என் வாழ்வில் படைத்தார் என்று நான் யோசித்துப் பார்க்கிறது இல்லை. ஏதோ ஒரு தேவ நோக்கம் நிறைவேறவோ, இல்லை தேவன் நாமம் மகிமையடையவோ, அல்லது, என்னில் நான் மேன்மைபாராட்டாதபடியோ, இந்த பலவீனம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறலாம் என்ற எண்ணங்கள் எனக்குள் வருவதில்லை. ஆனால் தேவனுடைய ஆவியானவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறபடியால், அவர் தேவனுடைய சித்தத்தின்படி வேண்டுதல் செய்கிறார்.
  3. எதிர்பாராத ஒரு பலவீனத்தை நாம் திடீரென வாழ்க்கையில் சந்திக்கும்போது, பெருமூச்சுகள் வரலாம். ஆனால் ஜெபம் வருமா என்பது கேள்வியே. படுக்கையில் சுருண்டு படுத்துக்கொண்டு, அழுது கொண்டிருக்க முடியும். ஆனால் அந்த கண்ணீரும் அழுகையும் தேவனுக்கு நேராக இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால், தேவனுடைய ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த கர்த்தரின் நாளன்று, நம் பலவீனங்களில் உதவி செய்கிற தேவனுடைய ஆவியானவரின் நிறைவால் நாம் நிரம்புவோமாக. ஆமென்.

ரோமர் 8_26

உம்மிடத்திற்கு…

பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். – சங்கீதம் 123:1.

நம்முடைய பரமபிதா, நம்முடைய அன்பான தகப்பனாகிய தேவன், பரலோகத்தில் வாசமாயிருக்கிற பரிசுத்தர். அவரை நோக்கிப் பார்க்க நம்மால் கூடாது. ஆனால் அவருடைய குமாரனும், நம்முடைய சகோதரனுமாகிய இயேசு கிறிஸ்து நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்து, தம்முடைய இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி இருக்கிறார். ஆகவே தைரியமாக கிருபாசனத்தண்டையில் வந்து நிற்கிறோம். கண்களை ஏறெடுக்கிறோம். இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் அப்படி செய்யும்போது, நம்முடைய பிதாவும் இயேசு கிறிஸ்துவுடைய பிதாவுமாகிய தேவன் நம்மைப் பிரியமாய் நோக்கிப் பார்க்கிறார். அந்த நம்பிக்கையோடு இந்த புதிய வாரத்திற்குள் நுழைவோம். கர்த்தர் நம்மை தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

சங்கீதம் 123_1