தேவனுக்கு உன்னைத் தெரியும்

என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். – சங்கீதம் 139:13

அன்பான சகோதரனே, சகோதரியே! தேவனுக்கு உன்னைத் தெரியும். இன்று அல்ல. நீ உன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுத்தபோதல்ல. நீ ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதல்ல. இல்லை, எனக்கன்பானவர்களே. உலகத்தை உருவாக்குமுன்னே, தேவன் உங்களை அறிந்து இருந்தார். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே, உங்களை பெயர் சொல்லி அறிந்தவர் அவர். உங்கள் தாயின் கர்ப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, இந்நாள் மட்டும் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறவர் அவர். ஏனென்றால் அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்கள் பரமபிதா. தம்முடைய குமாரனாகிய இயேசுவையே உங்களுக்காகக் கொடுத்தவர். ஒரு நல்ல அப்பாவைப் போல், தேவன் உங்களைக் குறித்து, சில திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் தோல்விகள் பற்றி அவருக்குத் தெரியும். உங்கள் குறைகளும் அவருக்குத் தெரியும். ஆனாலும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்படியான திட்டங்கள் அவைகள்.

ஆகவே இன்று நடக்கிற சில காரியங்கள் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதிருங்கள், அன்பானவர்களே. தற்கொலை உங்களுக்கு ஒரு வழியே அல்ல. இன்று ஒருவேளை காதல் தோல்வியினால் உன் இருதயம் துவண்டு போயிருக்கலாம். ஆனாலும் இதுவும் கடந்து போகும். நீ எதிர்பார்த்த வேலை உனக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இது உன் முடிவு அல்ல. நீ கனவு கண்ட படிப்பு உனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அல்ல உன் வாழ்க்கையின் முடிவு. ஒரு கதவு மூடும்போது, தேவன் உனக்காக வேறொரு கதவை நிச்சயம் திறப்பார்.

நீ தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போது, உன்னை அன்போடு நோக்கிப் பார்த்த அதே கண்களால், தேவன் இந்த வேளையும் உன்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் வாருங்கள். அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். தம் அன்பினால் அவர் உனக்கு ஆறுதல் தருவார். உன்னைப் பெலப்படுத்தி, தம் திட்டங்களை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். நம்பி வா. ஆமென்.

சங்கீதம் 139_13

Advertisements

நீ யூதகுலமானால்…

“அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம்.”
– எஸ்தர் 6:13

நீங்கள் யூதகுலமா? யூத கோத்திரத்தைச் சேர்ந்தவர்களா? கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்துகிறவர்களா? உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும், தேவனைப் பாடி துதிக்கிறவர்களா? ஒருவேளை இந்த நேரத்தில் கூட உங்கள் விரோதிகள் உங்களுக்கு விரோதமாய் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கலாம். உங்கள் வளர்ச்சியைத் தடை செய்ய, உங்கள் பாதையில் தடைகற்களை அவர்கள் போட்டிருக்கலாம். ஒவ்வொரு நாளும் அவர்கள் பலத்துக் கொண்டே இருக்கலாம்; அவர்கள் செய்வது எல்லாம் வாய்க்கலாம். அது உங்கள் இருதயத்தைப் பயப்படுத்தலாம்.

ஆனால், திடங்கொள்ளுங்கள். கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தரை ஓயாமல் துதிக்கிற யூதாவின் கோத்திரமாய் நீங்கள் மாறுங்கள். நீங்கள் கர்த்தரைப் பாடி துதிக்கும்போது, எந்த எதிரியும் உங்களை மேற்கொள்ள முடியாது. அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தாழ்ந்து போவது நிச்சயம். ஏனென்றால், நம் மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, யூதா கோத்திரத்து சிங்கமாய் இருக்கிறார்; அவர் உங்களுக்கு விரோதமாய் இருக்கிற ஒவ்வொரு வல்லமையையும் ஜெயங்கொண்டிருக்கிறார். ஆகவே, அவரை துதியுங்கள்; இன்னும் அதிகமாய் மகிமைப்படுத்துங்கள்.

எஸ்தர் 6_13

சிலுவையைக் குறித்தே அல்லாமல்…

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தே அல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. – கலாத்தியர் 6:14

இந்த உலகத்தில் நாம் மேன்மைபாராட்ட எத்தனையோ காரியங்கள் உண்டு. நம் நாட்டைப் பற்றி, நம்முடைய தாய் மொழியைப் பற்றி, நம்முடைய மதத்தைப் பற்றி, நம் ஜாதியைக் குறித்து, நம்முடைய வாழ்க்கையின் சாதனைகளைக் குறித்து, நம்முடைய குடும்பத்தைக் குறித்து, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவை எதையும் குறித்து நான் மேன்மைபாராட்டாதபடி, நம் பரலோக தகப்பனாகிய தேவன் என்னைக் காப்பாராக. கிறிஸ்து இயேசுவின் சிலுவையைக் குறித்தே அல்லாமல், வேறொன்றையும் குறித்து நான் மேன்மை பாராட்டாதபடி, தேவன் என்னைக் காப்பாராக.

ஏனென்றால் என் இரட்சிப்பு, என் மீட்பு, என் ஆசீர்வாதங்கள், என்னுடைய நித்திய ஜீவன் யாவும் கிறிஸ்து இயேசு சிலுவையில் செய்த தெய்வீகப் பரிமாற்றத்தினாலே மாத்திரம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, தேவனே, உம்முடைய குமாரனின் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்ட எனக்கு உதவும். என் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

கலாத்தியர் 6_14

உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். – ஏசாயா 58:11

மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்குவார். இந்த புதிய வருடத்தில் தம்முடைய பிள்ளைகளுக்குக் கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தம் இதுவே. முன்பு சொன்னதுபோல, இந்த வருடம் உலகத்திற்கு மிகக் கொடிய வருடமாகவே இருக்கும். கடைசி காலத்தின் பேரழிவுகள் பூமியைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவதுபோல இருக்கும். ஆனால், தேவனுடைய பிள்ளையே, திடன்கொள். மிகுந்த உபத்திரவத்தின் காலத்திலும், உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவேன் என்று கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார்.

கொடிய உஷ்ணக் காலத்தில், உனக்கு அருமையான நிழலாய்க் கர்த்தர் இருப்பார்; கடும் மழையின் காலத்தில் தப்பும் உறைவிடமாய் அவரே இருப்பார். வெள்ளம்போல சத்துரு வரும்போது, யெஹோவா நிஸி என்னும் ஜெயக்கொடியை ஆவியானவர் தாமே உனக்குமேல் பறக்கச் செய்வார். அந்தகார இருளிலும், இயேசு கிறிஸ்துவே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். மகா வறட்சியான காலங்களிலும் கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார்.

ஏசாயா 58_11

நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல உன் ஆத்துமா திருப்தியாகும் (சங்கீதம் 63:5). வறட்சியினால் உன் வாய் உலர்ந்து போகாது, உன் உதடுகள் ஒட்டிக்கொள்ளாது. கர்த்தர் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குகிறதினாலே, உன் வாய் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் கர்த்தரைப் பாடி மகிழும். ஆம், கடந்த வருடம், துக்கங்களின் மிகுதியால், உன் வாய் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கலாம். தேவனை பாடாமல் இருந்திருக்கலாம். உன் உதடுகள் நன்றி சொல்ல முடியாமல் ஒட்டிக்கொண்டிருக்கலாம். உன் துக்கத்தையே பேசிக்கொண்டிருந்திருக்கலாம். கர்த்தர் சொல்கிறார். நான் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவேன்; உன் வாய் ஆனந்தகளிப்புள்ள உதடுகளால் என்னைப் போற்றும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருக்கு அன்பாயிருந்த சீஷன் கூறின ஆசீர்வாதம் உன்மேல் வந்ந்து பலிக்கட்டும். பிரியமானவனே, பிரியமானவளே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். ஆமென்.

இயேசுவின் காலை…

அவன் காலைப் பிடித்துக்கொண்டாள். – 2 இராஜாக்கள் 4:27

1. சுகம் தான்.

2. ஓட்டத்தை நிறுத்தாதே.

சூனேமியாள் எலிசா தீர்க்கதரிசியிடம் வந்தபோது, அவள் ஒரே ஒரு காரியம் செய்தாள். அவருடைய காலை அவள் பிடித்துக் கொண்டாள். அவள் அழவில்லை; கண்ணீர் விடவில்லை. அழுது புலம்பவில்லை. ஆனாலும் அவள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நம் தேவனும், மனதுருகுகிற கர்த்தருமாகிய பிதாவுமானவர் எலிசா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி, அவள் அறிக்கையிட்டபடியே, அவள் வாழ்க்கையில் எல்லாம் சுகம் தான் என்று சொல்லும்படி மாற்றினார்.

என் அன்பானவர்களே, ஒருவேளை ஒரு சிலர் போல, உங்கள் மனதில் இருக்கிறதை ஒரு கோர்வையாக உங்களால் சொல்ல முடியாதவர்களாய் நீங்கள் இருக்கலாம். உங்கள் இருதயத்தின் பாரங்களை எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்குப் போராட்டம் உங்கள் வாழ்க்கையில் சூழ்ந்து இருக்கலாம். அப்படியே வார்த்தையில் சொல்லலாம் என்று தீர்மானித்தாலும், துக்கம் தொண்டையை அடைக்க, வெறும் கண்ணீர் மாத்திரமே வருகிறது… என்ன செய்வது? கலங்காதே, திகையாதே. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்களைப் பற்றிக்கொள். வேறு ஒரு இடம் இல்லை நமக்கு ஆறுதல் தர. நம்முடைய எல்லா பாரங்களையும், கவலைகளையும், துக்கங்களையும் நம்மால் சொல்ல முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். அவருக்குப் புரியும். அன்பான புன்னகையோடு அவர் உன்னை இப்போது பார்க்கிறார். பார்த்து, உன்னிடம் சொல்கிறார்: எல்லாம் சுகம் தான்! ஆமென், அப்படியே ஆகட்டும்.

இயேசுவின் பாதத்தில்

ஓட்டத்தை நிறுத்தாதே

போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே. – 2 இராஜாக்கள் 4:24

நேற்றைய தினம், “சுகம் தான்” என்று சூனேமியாளுடன் சொல்லி, இந்த கடைசி மாதத்துக்குள் பிரவேசித்தோம். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அப்படியே சகலவற்றையும் சுகமாயிருக்கும்படி செய்வாராக.

துக்கம் அவள் ஆத்துமாவை நிரப்பின உடனே, அந்த சூனேமியாள், தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைப் பார்க்கும்படி புறப்பட்டாள். அப்படி புறப்பட்டபோது, அவள் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுத்த கட்டளை தான்: போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே.

தேவனுக்குப் பிரியமானவர்களே! உங்கள் இருதயம் துக்கத்தினால் சோர்ந்துபோயிருக்கிறதோ? ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ? அந்த சூனேமியாளுடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். தேவனுடைய மனுஷனைச் சந்திக்க தான் அவள் போனாள்; ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் வாருங்கள். நீங்கள் இருக்கிற இடத்திலேயே அவரைத் தேடினால் போதும், அவர் வருவார். வந்து, துக்கத்தில் இருக்கிற உங்கள் ஆத்துமாவிடம் சொல்வார்: சுகம் தான். ஆமென்.

ஓட்டத்தை

சுகம் தான்!

அவள்: சுகந்தான் என்று சொல்லி… – 2 இராஜாக்கள் 4:26

இந்த சூனேமியாளுடைய ஒரே மகன் இறந்து விட்டான். ஆனால் அவள் புருஷன் கேட்கும்போது, எல்லாம் சரியாயிருக்கிறது என்று சொல்கிறாள். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனாகிய கேயாசி விசாரிக்கும்போதும், சுகந்தான் என்று சொல்கிறாளே அல்லாமல், தன்னுடைய உள்ளத்தின் துக்கங்களை அவள் சொல்லவில்லை.

அதனால் அவள் உள்ளத்தில் துக்கமோ, துயரமோ இல்லாமல் இல்லை. எலிசா சொல்கிறார்: அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது என்று (2 இராஜாக்கள் 4:27). ஆனால் தனக்கு ஓர் ஆசீர்வாதமாய் ஒரு பிள்ளையைக் கொடுத்த கர்த்தர், அந்த ஆசீர்வாதம் வீணாய்ப்போக விடமாட்டார் என்று அவள் விசுவாசித்தாள்; அந்த விசுவாசத்தை அறிக்கையாகச் செய்தாள். அவள் வார்த்தையின்படியே, அவள் வாழ்க்கை சுகமாய் மாறிற்று.

எனக்குப் பிரியமானவர்களே! இந்த 11 மாதங்கள் உங்களுக்கு எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது. ஆனால் இந்த 12 மாதத்திற்குள் நீங்கள் நுழைந்திருக்கும் இந்த வேளையில், பரலோகத்தில் இருக்கும் நம்முடைய நல்ல பிதா உங்களை நோக்கிப் பார்க்கிறார். உங்கள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறதைக் காண்கிற பரம பிதா, உங்கள்மேல் மனதுருகி, உங்களிடம் சொல்கிறார்: சுகம் தான். ஆமென்.

விசுவாசியுங்கள். சுகம் தான்! இதுவே இந்த 12-ஆம் மாதம் முழுவதும் உங்களுடைய விசுவாச அறிக்கையாய் இருக்கட்டும். சகல ஆறுதலின் தேவன் இந்த மாதத்தில், எல்லாவற்றையும் உங்களுக்கு சுகமாய் மாற்றித் தருவாராக. நீங்கள் பட்ட ஒவ்வொரு உபத்திரவத்தையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களையும், தோல்விகளையும், உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளையும் கூட கர்த்தர் வெற்றியாக, ஜெயமாக மாற்றித் தருவாராக. இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை வழிநடத்தும் விதத்தைக் காண்கின்ற யாவரும் உங்களைக் குறித்து சொல்லட்டும்: சுகம் தான். நம்ம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

2 இராஜாக்கள் 4_26