எலியாவின் வேலைக்காரன்–கீழ்ப்படிந்தான்

வெகு காலம் கிடைத்து இஸ்ரவேல் தேசத்தில் பெருமழை வரும்போது, அதை முதலில் பார்த்தது எலியாவின் வேலைக்காரன் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஆசீர்வாதம் கிடைக்க நான்கு காரியங்கள் பார்த்தோம்.

  1. அவன் கர்த்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவன்.
  2. அவன் எலியாவை பின்பற்றினான்.
  3. அவன் தன்னை வெறுத்தவனாய் இருந்தான்.
  4. அவன் தனக்காக பெரிய காரியங்களைத் தேடாதவன்.

இன்று இன்னும் ஒரு காரியம் பார்ப்போம். எலியாவின் வேலைக்காரன் கீழ்ப்படிகிறவனாயிருந்தான். எலியா அவனை ஏழு தரம் போய்ப் பார்க்க சொன்னார், அவனும் ஒரு சிறு குழந்தை போல கீழ்ப்படிந்து, ஒவ்வொரு முறையும் போய்ப் பார்த்துவிட்டு வந்தான். ஒருமுறை கூட ஏன் ஏழு தரம் போகவேண்டும்; மேகம் வரும்வரைக்கும் இங்கேயே நான் நின்று பார்த்துவிட்டு செல்கிறேன் என்று நினைக்கவில்லை.

நாம் ஒரு பெரிய காரியத்தை ஆண்டவரிடம் இருந்து எதிர்பார்க்கும்போது, அவர் நம்மிடமும் ஒரு பெரிய காரியத்தைச் செய்ய சொலவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் ஒரு சாதாரண காரியத்தை செய்யச் சொல்லும்போது, சோர்ந்துபோகிறோம். ஆனால் கர்த்தர் நம்மிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார்க்கவில்லை. கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். அவர் சொல்வதை செய்கிறவர்களாக நாம் இருக்கிறோமா என்பதைத் தான் அவர் பார்க்கின்றார். அப்படிப்பட்டவர்களாய் நாம் இருந்தால், நமக்கென்று ஒரு ஆசீர்வாதத்தை அவர் வைத்திருக்கிறார். அதை நாம் பெற்றுக்கொள்வதை யாரும் தடை செய்யவே முடியாது.

கீழ்ப்படிதல்

Advertisements

எலியாவின் வேலைக்காரன்–மேன்மை தேடாதவன்

இதற்கு முன்பு, வெகு காலம் கிடைத்து இஸ்ரவேல் தேசத்தில் பெருமழை வரும்போது, அதை முதலில் பார்த்தது எலியாவின் வேலைக்காரன். அப்படிப்பட்ட ஆசீர்வாதம் கிடைக்க மூன்று காரியங்கள் பார்த்தோம். 1. அவன் கர்த்தரை தெய்வமாக ஏற்றுக்கொண்டவன். 2. அவன் எலியாவை பின்பற்றினான். 3. அவன் தன்னை வெறுத்தவனாய் இருந்தான். இன்று இன்னும் ஒரு காரணம் பார்ப்போம்: அவன் தனக்காக பெரிய காரியங்களைத் தேடாதவன்.

இன்றைக்கு தேசத்தில் எழுப்புதல் வேண்டுமென்றால், அதற்கு நாம் பெரிய கூட்டங்களைத் தான் பார்க்கிறோம். எவ்வளவு பேர் இருக்கிறார்களோ, அவ்வளவு எழுப்புதல் என்று சொல்கிறோம். அப்படி எழுப்புதல் கூட்டங்கள், தேசத்தின் ஆசீர்வாதத்திற்கான கூட்டங்கள் என்று சொல்லிவிட்டால், உடனே எப்படியாவது அதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறோம். அதில் கலந்து கொள்கிற நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை எப்படி இருக்கிறது; பக்கத்தில் இருப்பவர் கர்த்தருக்குள் இருக்கிறாரா, இல்லையா; எதைப்பற்றியும் நமக்கு கவலை இல்லை. எப்படியாவது நம் பங்கை செய்திட வேண்டும்.

இப்போது எலியாவின் வேலைக்காரனைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். ஒரு பெரிய அற்புதத்தை செய்து, கர்த்தரே தேவன் என்று எலியா நிரூபித்திருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம் தேவனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பெரிய எழுப்புதல் ஏற்பட்டிருக்கிறது. ஆகாபிடம் எலியா சொல்கிறார்: ஒரு பெருமழையின் இரைச்சல் கேட்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில், எலியா அந்த வேலைக்காரனை தன்னோடு சேர்ந்து ஜெபிக்க சொல்லவில்லை. அதற்கு பதிலாக ஒரு சின்ன வேலை, அற்பமான ஒரு வேலையைக் கொடுக்கிறார். ஆனால் அந்த வேலைக்காரன் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தனக்குக் கொடுத்த வேலையை மாத்திரம் செய்கிறான். அவன் தனக்காக பெரிய காரியங்களைத் தேடாதவன்.

எனக்கன்பானவர்களே, ஒருவேளை நீங்கள் உங்கள் சபைக்காக, உங்கள் ஊருக்காக, உங்கள் தேசத்துக்காக ஏறெடுக்கும் ஜெபத்தை ஒருவரும் பார்க்காமல் இருக்கலாம். பிறர் கண்ணீரோடு தேசத்துக்காக ஜெபிக்கிறதை பார்க்கும்போது, என் சின்ன ஜெபத்தைக் கர்த்தர் கேட்பாரா என்ற குழப்பம் வரலாம். உங்கள் சபையில் உங்களுக்குத் தரப்பட்ட பொறுப்பு அற்பமானதாய் இருக்கலாம். ஆனால் அந்த பொறுப்பையும் சந்தோஷமாக செய்கிறீர்களா? உங்களுக்காக பெரிய காரியங்களைத் தேடாமல், முழு இருதயத்தோடும் உங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், கர்த்தர் உங்களில் பிரியமாய் இருக்கிற்ர். ஏனென்றால், அவர் பெருகவும், நாம் சிறுகவும் வேண்டும்.

யோவான் 3.30

எலியாவின் வேலைக்காரன்–தன்னை வெறுத்தவன்

ஒரு பெரிய ஆசீர்வாத மழை தேவஜனங்களுக்கு வந்தபோது, எலியாவின் வேலைக்காரன் தான் அந்த மேகத்தை முதலில் பார்க்கும் பாக்கியமுடையவனாய் இருந்தான்; அதை எலியாவுக்கும், ஆகாப் ராஜாவுக்கும் சொல்லக்கூடிய சுவிசேஷகனாகவும் மாறினான். ஏன் அப்படிப்பட்ட பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது? நான் ஏற்கனவே இரண்டு காரணங்களைச் சொன்னேன். 1. அவன் கர்த்தரைத் தெய்வமாகப் ஏற்றுக்கொண்டவன். 2. அவன் எலியா தீர்க்கதரிசியைப் பின்பற்றினவன். இன்னொரு காரணம்: அவன் தன் சுயத்தை வெறுத்தவன்.

கொடிய பஞ்சத்தில் வாடிப்போயிருந்த ஜனங்கள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுதும் நின்று, எலியா கர்த்தரே தெய்வம் என்பதை நிருபித்து, பாகாலின் தீர்க்கதரிசிகளைக் கொன்றதைப் பார்த்தார்கள். மாலை நேரம். பசியாலும் தாகத்தாலும் வாடின ஜனங்கள் இப்போது அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஆகாப் ராஜாவைப் பார்த்து எலியா தீர்க்கதரிசியே சொல்லுகிறார்: போய் சாப்பிடும்.

அந்த வேலைக்காரனும் சோர்ந்து போய் இருந்தான்; பசியாய் இருந்தான்; களைத்துப்போய் இருந்தான். ஆனாலும், அந்த நேரத்தில் எலியாவை பின்பற்ற அவன் ஆயத்தமாய் இருந்தான். தன் சுயத்தை வெறுத்து, தன் தேவைகளைப் பொருட்படுத்தாமல், எலியா தீர்க்கதரிசியின் தேவைகளை முன்னுக்கு வைத்து, அவன் அவரை பின்பற்றினான்.

நாம் இந்த உலகத்தின் சந்தோஷங்களை வெறுத்து, தேவனுடைய காரியங்களை செய்யும்படி, நம் சிலுவையை சுமந்து கொண்டு, அவர் பின்செல்லும்போது, இயேசு கிறிஸ்து அதை கவனமாய் உற்றுப்பார்க்கிறார். ஒருவேளை சில தேவனுடைய ஊழியக்காரர்கள் செய்வதுபோல, 40 நாட்கள் உபவாசம் எடுத்து நீ ஜெபிக்காமல் இருக்கலாம். ஆனால், நீ தேவனுக்காக சுமக்கிற ஒரு சின்ன சிலுவையைக் கூட, உனக்காக கல்வாரியில் சிலுவையில் தொங்கினவர், அற்பமாய் எண்ணுகிறவரல்ல. உன் குடும்பத்துக்காக, உன் சபைக்காக, உன் ஊருக்காக, உன் தேசத்துக்காக, உன்னை வெறுத்து, உன் சிலுவையை சுமந்துகொண்டு, இயேசுவை பின்பற்ற நீ ஆயத்தமா? அப்படி நீ செய்வாயானால், எழுப்புதல் தேசத்தில் வரும்போது, ஆசீர்வாத மழை தொடங்கும்போது, அதை பெற்றுக்கொள்கிற முதல் ஆள் நீயாக இருப்பாய். பிறருக்கு, அவர்களுடைய பாவங்களை கர்த்தர் மன்னித்துவிட்டார் என்ற நற்செய்தியை சொல்லுகிற பாக்கியவானாய், பாக்கியவதியாய் நீ இருப்பாய்.

லூக்கா 9.23

எலியாவின் வேலைக்காரன் – பின்பற்றுகிறவன்

கடந்த முறை சொன்னேன், ஒரு பெரிய ஆசீர்வாதம் தேவஜனங்களுக்கு வரும்போது, அதை முதலில் பார்த்து, அந்த நற்செய்தியை எல்லாருக்கும் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றவன் எலியாவின் வேலைக்காரன்; ஏனென்றால், முதல் காரணம் அவன் கர்த்தரை தெய்வமாகக் கொண்டவன்.

ஆனால் கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருப்பது என்பது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிதாவாகிய தேவனையும், அவருடைய குமாரனும் நம்முடைய ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவையும் ஆராதிப்பதும், நான் கிறிஸ்தவன், நான் கிறிஸ்தவள் என்று சொல்லிக்கொள்வது மட்டுமல்ல.

3-1/2 வருடங்களாக மழை இல்லை. கொடுமையான வெயிலில் சோர்ந்து போனவர்கள் இஸ்ரவேல் மக்கள். தண்ணீர் இல்லாத கொடுமை. அது நமக்கு நன்றாகவே தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாள் முழுதும் கொதிக்கும் வெயிலில், கர்மேல் மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டு இருந்து, பசியாலும், தாகத்தாலும், வெயிலின் உஷ்ணத்திலும் வாடிப்போன ஜனங்கள், அன்று மாலை எலியா தீர்க்கதரிசிக்கு முன்பாக, “கர்த்தரே தெய்வம்” என்று தீர்மானம் செய்துகொண்டார்கள். மிகுந்த களைப்புடன் எல்லாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகிறார்கள் – ஒருவனைத் தவிர. எலியாவின் வேலைக்காரனைத் தவிர.

அவன் கூட்டத்தோடு போகவில்லை. அவன் தேவனுடைய மனிதனைப் பின்பற்ற தீர்மானித்தான். எலியாவோடு கர்மேல் மலையின் உச்சிக்குப் போகவும் தயாராய் இருந்தான். அதினால், அந்த மாபெரும் ஆசீர்வாதத்தை முதலில் பார்த்தவனாகவும், பிறருக்கு அறிவிக்கிறவனாகவும் மாறினான்.

இயேசுவை பின்பற்றுதல்

எனக்கன்பானவர்களே, நீங்கள் இப்போது இருக்கிற நிலைமையில், எப்படி கூட்டத்தைப் பின்பற்றாமல், இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவது என்று திகைத்து நிற்கிறீர்களோ? ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு போராட்டங்கள் சந்திக்க வேண்டியது இருக்கிறது. எவ்வளவு நாட்களாக, ஆசீர்வாதங்களுக்காக, சில நன்மைக்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதில் எப்படி இயேசு கிறிஸ்துவுடன் தனியே இருப்பது? கண்டிப்பாக களைப்பாக இருக்கும்; பிறருக்குப் பைத்தியமாகக் கூட இருக்கும்.

ஆனால் அவரைப் பின்பற்றுங்கள். கூட்டத்தோடு கூட்டமாக பின்பற்றுகிறவர்களாக மாத்திரம் அல்ல, அவருடன் தனியே ஜெப மலையில் ஏறுகிறவர்களாகவும் இருப்போம். அப்போது வரப்போகிற அந்த பெரிய ஆசீர்வாதங்களை, உங்கள் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல, உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் தேசத்துக்கும் வரப்போகும் பெரிய ஆசீர்வாதங்களை முதலில் பார்க்கிறவர்களாகவும், பிறருக்கு அறிவிக்கிறவர்களாகவும், கர்த்தர் உங்களை உயர்த்துவார். ஏனென்றால் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். – யோவான் 12:26

எலியாவின் வேலைக்காரன்–கர்த்தரே தெய்வம்

3-1/2 வருடங்களாக மழை இல்லை. பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று ஆகாப் ராஜாவுக்கு எலியா தீர்க்கதரிசனமாகச் சொல்லிவிட்டார். அந்த பெருமழையின் முதல் அடையாளத்தைப் பார்க்கிற பாக்கியத்தைப் பெற்றவன், அதை எலியாவுக்கு சொல்லும் ஆசீர்வாதத்தைப் பெற்றவன், அந்த செய்தியை ஆகாப் ராஜாவுக்கு சொல்லும் கட்டளையைப் பெற்றவன் – எலியாவின் வேலைக்காரன்.

ஏன் பஞ்சம் தீரப்போகிறதை முதலில் காணும் பாக்கியம் இவனுக்குக் கிடைத்தது? ஏன் பெரும் ஆசீர்வாதத்தின் மேகத்தை இவன் பார்த்தான்? கர்த்தர் நமக்கு அதை வெளிப்படுத்தி, நெடுங்காலமாய் ஆசீர்வாதங்களுக்குக் காத்திருக்கும் நம்மையும் அப்படியே ஆசீர்வதிப்பாராக.

Servant of Elijah

1. இவன் கர்மேல் பர்வதத்தில் கர்த்தரே தெய்வம் என்று அறிக்கையிட்டவனாய் இருக்கிறான். (1 இராஜாக்கள் 18:39) இவன் அதற்கு முன்பாக குந்தி குந்தி நடந்தவனா (21-ஆம் வசனம்) அல்லது பாகால்களுக்கு முன்பாக முழந்தாளிடாதவனா, நமக்குத் தெரியாது. ஆனால், அன்று இஸ்ரவேல் ஜனங்கள் கர்மேல் பர்வதத்தில், கர்த்தரே தெய்வம் என்று அறிக்கையிட்டு, கர்த்தரை தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டபோது, அவர்களில் இவனும் ஒருவனாக இருந்தான்.

அன்புக்குரியவர்களே, இன்று வரை நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கவலை இல்லை. ஆனால் இந்த நாளில் நீங்கள் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்று ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்க்கையையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் அர்ப்பணிக்க ஆயத்தமாய் இருந்தால், உங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்து, உங்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தி செல்ல அவர் ஆயத்தமாய் இருக்கிறார்.

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே அவரை ஏற்றுக்கொண்டிருந்தால், திடன்கொள்ளுங்கள். பெருமழையின் சத்தம் கேட்கிறது. ஆமென்.