உபத்திரவத்திற்கு முன்…

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். – சங்கீதம் 119:67

நான் வழிதப்பி நடந்தேன். இப்படி சொன்னாலே, இன்று கிறிஸ்தவ உலகம் கூட நம்மைத் தப்பாகப் பார்க்கும். ஏனென்றால், வழிதப்பி நடந்தேன் என்று சொன்னாலே, நாம் பிறரை ஏமாற்றி விட்டோம், திருடி விட்டோம், இச்சையோடு பிறரிடம் பழகினோம், விபசாரம் செய்து விட்டோம் என்று உலகத்தின் போக்கோடு மாத்திரம் பார்க்க நாம் பழகிக் கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் காட்டிலும் ஒரு மேலான தரம் உடையது.

உலகத்தின் பார்வையில் பாவம் என்று சொல்லப்படுகிற ஒன்றையும் நாம் செய்யாமல் இருக்கலாம். ஏன், இந்த உலகம் மெச்சிக்கொள்கிற காரியங்களை நாம் செய்து, உலகத்தால் பாராட்டப்படக் கூடிய ஒரு வாழ்க்கையைக்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும், நம்முடைய தேவனின் பார்வையில் நாம் வழிதப்பி நடக்கிறவர்களாக இருக்கலாம்.

ஏசாயா தீர்க்கதரிசி இதை அழகாக 53-ஆம் அதிகாரம், 6-ஆம்  வசனத்தில்  சொல்கிறார்.  நாம்  எல்லாரும்  வழிதப்பித் திரிந்தோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு  விளக்கமும்  தருகிறார். அவனவன் தன்தன் வழியிலே போனோம் என்று சொல்கிறார். தீய வழியில் போனோம் என்று சொல்லவில்லை, தன்தன் வழியிலே போனோம். மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவை விட்டு, நம் சொந்த வழிகளிலே போனோம்.

சிற்சில வேளைகளில், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு, நம் தவறை உணர்ந்தவர்களாய்,, அவருடைய வழிக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் போகும் பாதை நமக்குத் தவறாகத் தெரிவதில்லை; எல்லாரும் நாம் வாழ்கிற விதத்தைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் நன்றாக வாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை எல்லாம் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் பின்னே நடப்பது உலகத்தின் பார்வைக்கும், நம்முடைய பார்வைக்கும் கூட முட்டாள்த்தனமாகவேத் தெரியும். அந்த நேரங்களில், நம்முடைய பரம தகப்பன் தம்முடைய அன்பின் கரங்களால், நம்மை சற்று உபத்திரவத்திற்குள் நடத்தும்போது, நாம் அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறோம்.

பரலோக தகப்பனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக, கிருபைக்காக, நன்றி. நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தாலே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். எங்கள் வழிகளின் தவறுகளை நாங்கள் உணரும்படி, உம்முடைய அன்பினாலே, உபத்திரவங்களை எங்களுக்கு அனுமதித்தீரே, அதற்காகவும் நன்றி. இப்பொழுதோ நாங்கள் உம்முடைய வார்த்தைகளைக் காத்து நடக்கிறோம். நன்றி அப்பா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

சங்கீதம் 119_67

Advertisements

சுகம் தான்!

அவள்: சுகந்தான் என்று சொல்லி… – 2 இராஜாக்கள் 4:26

இந்த சூனேமியாளுடைய ஒரே மகன் இறந்து விட்டான். ஆனால் அவள் புருஷன் கேட்கும்போது, எல்லாம் சரியாயிருக்கிறது என்று சொல்கிறாள். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனாகிய கேயாசி விசாரிக்கும்போதும், சுகந்தான் என்று சொல்கிறாளே அல்லாமல், தன்னுடைய உள்ளத்தின் துக்கங்களை அவள் சொல்லவில்லை.

அதனால் அவள் உள்ளத்தில் துக்கமோ, துயரமோ இல்லாமல் இல்லை. எலிசா சொல்கிறார்: அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது என்று (2 இராஜாக்கள் 4:27). ஆனால் தனக்கு ஓர் ஆசீர்வாதமாய் ஒரு பிள்ளையைக் கொடுத்த கர்த்தர், அந்த ஆசீர்வாதம் வீணாய்ப்போக விடமாட்டார் என்று அவள் விசுவாசித்தாள்; அந்த விசுவாசத்தை அறிக்கையாகச் செய்தாள். அவள் வார்த்தையின்படியே, அவள் வாழ்க்கை சுகமாய் மாறிற்று.

எனக்குப் பிரியமானவர்களே! இந்த 11 மாதங்கள் உங்களுக்கு எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது. ஆனால் இந்த 12 மாதத்திற்குள் நீங்கள் நுழைந்திருக்கும் இந்த வேளையில், பரலோகத்தில் இருக்கும் நம்முடைய நல்ல பிதா உங்களை நோக்கிப் பார்க்கிறார். உங்கள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறதைக் காண்கிற பரம பிதா, உங்கள்மேல் மனதுருகி, உங்களிடம் சொல்கிறார்: சுகம் தான். ஆமென்.

விசுவாசியுங்கள். சுகம் தான்! இதுவே இந்த 12-ஆம் மாதம் முழுவதும் உங்களுடைய விசுவாச அறிக்கையாய் இருக்கட்டும். சகல ஆறுதலின் தேவன் இந்த மாதத்தில், எல்லாவற்றையும் உங்களுக்கு சுகமாய் மாற்றித் தருவாராக. நீங்கள் பட்ட ஒவ்வொரு உபத்திரவத்தையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களையும், தோல்விகளையும், உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளையும் கூட கர்த்தர் வெற்றியாக, ஜெயமாக மாற்றித் தருவாராக. இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை வழிநடத்தும் விதத்தைக் காண்கின்ற யாவரும் உங்களைக் குறித்து சொல்லட்டும்: சுகம் தான். நம்ம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

2 இராஜாக்கள் 4_26

நீதிமொழிகள் 1:33

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். 

இந்த புதிய மாதத்தில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். விக்கினமின்றி வாசம் பண்ணுவோம்; ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்போம். கிறிஸ்துவின் சமாதானம் நம்மோடு இருக்கட்டும். ஆமென்.

நீதிமொழிகள் 1_33

சங்கீதம் 4:7

அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.

சந்தோஷம். இந்த உலகத்தின் காரியங்கள் நிச்சயமாகவே நம்மைச் சந்தோஷப்படுத்துகிறது. அப்படி இல்லை என்று ஒருபோதும் வேதம் சொல்லவில்லை. ஆனால் இந்த உலகத்தின் காரியங்கள் எந்த விநாடியிலும் மாறும்; நம்முடைய சந்தோஷமும் அப்போது மாறிப்போகும். ஆனால், தேவன் தருகிற சந்தோஷம் மாறாத ஒன்று. சூழ்நிலைகள் மாறினாலும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; ஆகவே அந்த சந்தோஷம் மாறுவதில்லை. அந்த சந்தோஷம் இந்த நாளில் உங்களையும் என்னையும் நிரப்பட்டும்.

%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4-7

பிலிப்பியர் 1:29

கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடுகிறது ஒரு பாரமான காரியம் அல்ல; அது தேவன் நம்மேல் சுமத்துகிற ஒரு சுமக்க முடியாத சுமையும் அல்ல. அது நமக்கு அருளப்பட்ட ஒன்று. எப்படி கிறிஸ்துவை விசுவாசிக்கிறது ஒரு சந்தோஷமான காரியமோ, அப்படியே அவருக்காகப் பாடுபடுவதும் ஒரு சந்தோஷமான காரியமே.

எப்படி இயேசு கிறிஸ்துவை சந்தோஷத்தோடு நம்முடைய இரட்சகராய் ஏற்றுக்கொண்டோமோ, அதே சந்தோஷத்தோடு அவருக்காகப் பாடுபடுவதையும் ஏற்றுக்கொள்வோம். அவருடைய நுகம் எளிது.

%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-1-29

சங்கீதம் 20:7-8

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்; அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.

கிறிஸ்தவர்கள் கூட அநேக நேரங்களில் தங்களிடம் இருக்கும் பொருட்களையோ, பணத்தையோ, தங்கள் கல்வியறிவையோ, வேலை அல்லது தொழிலையோ நம்பி வாழ்கிறார்கள். ஒன்றுமே இல்லையென்றால், அப்பொழுது தான், “பயப்படாதே, கர்த்தரை நம்பு” என்று சொல்கிறார்கள்.

தேவனுடைய பிள்ளையே, எல்லாம் ஒரு நொடியில் அழிந்து போகக்கூடிய மாயை. ஆனால் மாறாதவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே. அவரையே நம்புங்கள்; அவரில் மேன்மை பாராட்டுங்கள். எழுந்து நிமிர்ந்து நிற்கச் செய்வார்.

சங்கீதம் 20_7-8

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

இந்த புதிய மாதத்தில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் மேய்ப்பராய் இருந்து, இது வரை நாம் நடக்காத வழிகளில் நம்மை நடத்தி, வாக்குத்தத்த பூமிக்குள் நம்மை நடத்திச் செல்வாராக. அவருடைய அன்பு நம்மை சமாதானப்படுத்தட்டும். அவர் தந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறுகிறதினாலே, நம் உள்ளங்கள் இளைப்பாறட்டும்.

சங்கீதம் 23_1