உபத்திரவத்திற்கு முன்…

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். – சங்கீதம் 119:67

நான் வழிதப்பி நடந்தேன். இப்படி சொன்னாலே, இன்று கிறிஸ்தவ உலகம் கூட நம்மைத் தப்பாகப் பார்க்கும். ஏனென்றால், வழிதப்பி நடந்தேன் என்று சொன்னாலே, நாம் பிறரை ஏமாற்றி விட்டோம், திருடி விட்டோம், இச்சையோடு பிறரிடம் பழகினோம், விபசாரம் செய்து விட்டோம் என்று உலகத்தின் போக்கோடு மாத்திரம் பார்க்க நாம் பழகிக் கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் காட்டிலும் ஒரு மேலான தரம் உடையது.

உலகத்தின் பார்வையில் பாவம் என்று சொல்லப்படுகிற ஒன்றையும் நாம் செய்யாமல் இருக்கலாம். ஏன், இந்த உலகம் மெச்சிக்கொள்கிற காரியங்களை நாம் செய்து, உலகத்தால் பாராட்டப்படக் கூடிய ஒரு வாழ்க்கையைக்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும், நம்முடைய தேவனின் பார்வையில் நாம் வழிதப்பி நடக்கிறவர்களாக இருக்கலாம்.

ஏசாயா தீர்க்கதரிசி இதை அழகாக 53-ஆம் அதிகாரம், 6-ஆம்  வசனத்தில்  சொல்கிறார்.  நாம்  எல்லாரும்  வழிதப்பித் திரிந்தோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு  விளக்கமும்  தருகிறார். அவனவன் தன்தன் வழியிலே போனோம் என்று சொல்கிறார். தீய வழியில் போனோம் என்று சொல்லவில்லை, தன்தன் வழியிலே போனோம். மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவை விட்டு, நம் சொந்த வழிகளிலே போனோம்.

சிற்சில வேளைகளில், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு, நம் தவறை உணர்ந்தவர்களாய்,, அவருடைய வழிக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் போகும் பாதை நமக்குத் தவறாகத் தெரிவதில்லை; எல்லாரும் நாம் வாழ்கிற விதத்தைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் நன்றாக வாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை எல்லாம் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் பின்னே நடப்பது உலகத்தின் பார்வைக்கும், நம்முடைய பார்வைக்கும் கூட முட்டாள்த்தனமாகவேத் தெரியும். அந்த நேரங்களில், நம்முடைய பரம தகப்பன் தம்முடைய அன்பின் கரங்களால், நம்மை சற்று உபத்திரவத்திற்குள் நடத்தும்போது, நாம் அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறோம்.

பரலோக தகப்பனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக, கிருபைக்காக, நன்றி. நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தாலே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். எங்கள் வழிகளின் தவறுகளை நாங்கள் உணரும்படி, உம்முடைய அன்பினாலே, உபத்திரவங்களை எங்களுக்கு அனுமதித்தீரே, அதற்காகவும் நன்றி. இப்பொழுதோ நாங்கள் உம்முடைய வார்த்தைகளைக் காத்து நடக்கிறோம். நன்றி அப்பா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

சங்கீதம் 119_67

இயேசுவின் காலை…

அவன் காலைப் பிடித்துக்கொண்டாள். – 2 இராஜாக்கள் 4:27

1. சுகம் தான்.

2. ஓட்டத்தை நிறுத்தாதே.

சூனேமியாள் எலிசா தீர்க்கதரிசியிடம் வந்தபோது, அவள் ஒரே ஒரு காரியம் செய்தாள். அவருடைய காலை அவள் பிடித்துக் கொண்டாள். அவள் அழவில்லை; கண்ணீர் விடவில்லை. அழுது புலம்பவில்லை. ஆனாலும் அவள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நம் தேவனும், மனதுருகுகிற கர்த்தருமாகிய பிதாவுமானவர் எலிசா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி, அவள் அறிக்கையிட்டபடியே, அவள் வாழ்க்கையில் எல்லாம் சுகம் தான் என்று சொல்லும்படி மாற்றினார்.

என் அன்பானவர்களே, ஒருவேளை ஒரு சிலர் போல, உங்கள் மனதில் இருக்கிறதை ஒரு கோர்வையாக உங்களால் சொல்ல முடியாதவர்களாய் நீங்கள் இருக்கலாம். உங்கள் இருதயத்தின் பாரங்களை எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்குப் போராட்டம் உங்கள் வாழ்க்கையில் சூழ்ந்து இருக்கலாம். அப்படியே வார்த்தையில் சொல்லலாம் என்று தீர்மானித்தாலும், துக்கம் தொண்டையை அடைக்க, வெறும் கண்ணீர் மாத்திரமே வருகிறது… என்ன செய்வது? கலங்காதே, திகையாதே. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்களைப் பற்றிக்கொள். வேறு ஒரு இடம் இல்லை நமக்கு ஆறுதல் தர. நம்முடைய எல்லா பாரங்களையும், கவலைகளையும், துக்கங்களையும் நம்மால் சொல்ல முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். அவருக்குப் புரியும். அன்பான புன்னகையோடு அவர் உன்னை இப்போது பார்க்கிறார். பார்த்து, உன்னிடம் சொல்கிறார்: எல்லாம் சுகம் தான்! ஆமென், அப்படியே ஆகட்டும்.

இயேசுவின் பாதத்தில்

ஓட்டத்தை நிறுத்தாதே

போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே. – 2 இராஜாக்கள் 4:24

நேற்றைய தினம், “சுகம் தான்” என்று சூனேமியாளுடன் சொல்லி, இந்த கடைசி மாதத்துக்குள் பிரவேசித்தோம். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அப்படியே சகலவற்றையும் சுகமாயிருக்கும்படி செய்வாராக.

துக்கம் அவள் ஆத்துமாவை நிரப்பின உடனே, அந்த சூனேமியாள், தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைப் பார்க்கும்படி புறப்பட்டாள். அப்படி புறப்பட்டபோது, அவள் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுத்த கட்டளை தான்: போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே.

தேவனுக்குப் பிரியமானவர்களே! உங்கள் இருதயம் துக்கத்தினால் சோர்ந்துபோயிருக்கிறதோ? ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ? அந்த சூனேமியாளுடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். தேவனுடைய மனுஷனைச் சந்திக்க தான் அவள் போனாள்; ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் வாருங்கள். நீங்கள் இருக்கிற இடத்திலேயே அவரைத் தேடினால் போதும், அவர் வருவார். வந்து, துக்கத்தில் இருக்கிற உங்கள் ஆத்துமாவிடம் சொல்வார்: சுகம் தான். ஆமென்.

ஓட்டத்தை

ஆதியாகமம் 22:8

தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்.

ஒரு வயதான தகப்பன். அவருடைய ஒரே மகன். 3-நாட்கள் மனதளவில் போராட்டத்தோடு ஒரு கொடிய பயணம். அந்த பயணத்தின் முடிவில் காத்திருப்பது இருதயத்தை உடைக்கக் கூடிய ஒரு தியாகம். மோரியா மலையின் அடிவாரத்தில் இருக்கச் சொன்ன இரண்டு வேலைக்காரர்களுக்கும் ஒரு கேள்வி உண்டு. ஆனால் வயதான தங்கள் எஜமானனிடம் கேட்க தைரியம் இல்லை. எங்கே அப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் இருக்க, கடைசியில் யார் கேட்கக் கூடாதோ, அந்த வாலிப மகன் கேட்டே விடுகிறான்: தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே??? துக்கத்தில் நொறுங்கிக்கொண்டிருக்கும் இருதயத்தில் இருந்து விசுவாச வார்த்தைகள் வெடித்துக் கிளம்புகிறது: தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார். ஆம், கர்த்தர் பார்த்துக்கொண்டார். முதலில் மோரியா மலையில். இரண்டாவது கல்வாரி மலையில். கர்த்தர் பார்த்துக்கொண்டார்.

வாழ்க்கையின் போராட்டங்கள் மிகுதியாகி உன்னால் சமாளிக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்போது, கல்வாரியை நோக்கிப் பார். எல்லா திசைகளிலும் நெருக்கப்படும்போது, கண்களை உயர்த்தி, சிலுவையின் மேல் உன் கண்களைப் பதிய வை. பாவச்சேற்றினில் சிக்குண்டு, தேவனின் சமுகத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் தவிக்கும்போது, இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப்பார். உண்மையான அன்புக்கு ஏங்குகிறாயோ? தம் ஒரேபேறான குமாரனையே தந்தருளுமளவுக்கு உன்னை உண்மையாய் நேசித்த பரலோக பிதாவை நோக்கிப்பார். அவர் யெஹோவா யீரே – எல்லாம் பார்த்துக்கொள்வார்.

ஆதியாகமம் 22_8

பிலிப்பியர் 4:6

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

1. கவலைப்படாதேயுங்கள். ஒன்றுக்கும் கவலைப்படாதேயுங்கள். ஏனென்றால், தேவன் சமீபமாயிருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கிறதைக் காட்டிலும், நீங்கள் உணர்வதைக் காட்டிலும், தேவன் உங்களுக்கு சமீபமாய் இருக்கிறார். உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், கவலைப்படாதேயுங்கள், சூழ்நிலைகளை மாற்றுகிறவர் உங்களுக்குச் சமீபமாயிருக்கிறார்.

2. ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். இன்று தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதது ஒரு வேதனையான காரியம். ஜெபம், வேண்டுதல், விண்ணப்பம் – இந்த மூன்றும் இன்று கிறிஸ்தவ உலகில் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாகச் சொல்கிறார் – உங்கள் விண்ணப்பங்களை, ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள் என்று.

3. ஸ்தோத்திரத்தோடே கூடிய – இன்று தமிழ் கிறிஸ்தவ உலகில் ஸ்தோத்திரம் சொல்வது என்பது ஒரு மந்திரம் போல ஆகிவிட்டது. என்ன ஆனாலும், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் ஜெபங்கள் கேட்கப்படும் என்ற முட்டாள்தனமான போதனைகள் இன்று போதிக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு சகோதரி தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆனால் விடாமல் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேதனையான காரியம். உங்கள் ஸ்தோத்திரங்கள் அர்த்தமுள்ளவைகளாய் இருக்கட்டுமே.

பிலிப்பியர் 4_6

ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்திலிருந்து சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்களிலே, கிறிஸ்தவர்கள் தான் அதிகம் சமாதானம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறதை நாம் பார்க்கிறோம். அதிகப்படியான மனச்சோர்வும் (depression), அழுத்தமும் (pressure) சதவீத அளவில் கிறிஸ்தவர்களை தான் பிறரைக் காட்டிலும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அதற்குப் பதில் – விசுவாசத்தினாலே நீதிமான்கள்.

நீங்கள் நீதிமான் என்று அறிந்திருக்கிறீர்களா? எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா? விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா? கிறிஸ்து இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே விசுவாசிக்கிறீர்களா, அல்லது உங்கள் பரிசுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கிறீர்களா?

நாம் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருந்தோமானால், தேவனுடைய சமாதானம் நம்மோடு தங்கியிருக்கும். ஏனென்றால் நம்முடைய பிதாவும், இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவுமாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கும் எவரையும் நேசிக்கிறார். அவர் தாமே கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்துவை எனக்காகவும் உங்களுக்காகவும் ஒப்புக்கொடுத்தார். அந்த பரிகாரியாகிய இயேசுவை விசுவாசிப்போம்; நீதிமான்களாவோம்; தேவனிடத்தில் இருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

ரோமர் 5_1

4. விசுவாசம்–எதை நம்புகிறோம்?

2014-ஆம் ஆண்டு. ஒரு பெரும் புயல் இந்தியாவை நோக்கி வந்தது. அந்த புயல் தாக்கி, இந்தியாவில் பாதி அழிந்து விடும் என்று எல்லாரும் நினைத்தார்கள். குறிப்பாக தென் இந்தியா முழுக்க பெரும் அழிவு வரும் என்று சொல்லப்பட்டது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த படத்தைப் பார்த்தால், உங்களுக்கே புரியும் ஏன் என்று.

2014 storm

Hudhud CIMSS

ஆனால் இந்த புயலால் ஒரு பெரும் சேதமும் வரவில்லை. வழக்கம்போல விசாகப்பட்டினம் மாத்திரம் தாக்கப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் டி.வி.யில் பேசினவர்கள் எல்லார் முகத்திலும் கரியை பூசிவிட்டு, அந்த புயல் ஒன்றுமில்லாமல் போனது.

சரி, ஏன் இப்படிப்பட்ட ஒரு பெரிய அழிவு வரும் என்று எல்லாரும் நம்பினார்கள்? ஏனென்றால் இந்த எச்சரிக்கையைக் கொடுத்தது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா. ஆகவே எல்லாரும் கண்டிப்பாக அந்த பேரழிவு வரும் என்று நம்பினார்கள். ஆனால் அவர்கள் நம்பின நம்பிக்கை தவறாகப் போனது.

கடந்த முறை பார்த்தோம் – விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதி என்று. ஆனால் ஒன்றை உறுதியாக நம்பினால் போதாது, நாம் எதை நம்புகிறோம் என்பதும் முக்கியம். அன்று எல்லாரும் நாஸாவின் எச்சரிப்பை நம்பினார்கள், ஏனென்றால் நாஸா மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை; ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது.Titanic

இந்த உலகத்தில் எதையுமே முழுமையாக நம்ப முடியாது. அதாவது விசுவாசம் வைக்கக்கூடிய அளவில் இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது அல்ல. டைட்டானிக் என்ற கப்பலில் சென்ற எல்லாருமே அந்த கப்பல் மூழ்கவே மூழ்காது என்ற விசுவாசத்தோடு தான் சென்றார்கள். நம் எல்லாருக்குமே தெரியும் அந்த  விசுவாசத்தின் முடிவு என்ன என்று.

விசுவாசத்தின் மதிப்பு நாம் எதை விசுவாசிக்கிறோம் என்பதில் இருக்கிறது. ஒரு கிறிஸ்தவராக நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள்? உங்களைக் கேட்டுப்பாருங்கள். அநேகர் ஊழியக்காரர்களையும், பிரசங்கியார்களையும் நம்புகிறார்கள். ஊழியக்காரர்கள் சொன்னால் சரியாக இருக்கும். இவர்கள் தவறாக சொல்லமாட்டார்கள். இப்படி ஒரு கூட்டம். அன்று மோசேக்குப் பின் அப்படி தான் இஸ்ரவேல் ஜனங்கள் சென்றார்கள். என்ன ஆயிற்று? மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் இரவும் பகலும் தேவனோடு இருக்கையில், ஜனங்கள் என்ன சொல்கிறார்கள் என்று யாத்திராகமம் 32:1 சொல்கிறது:
எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்.

மோசே ஒரு தலைவர். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாவிட்டால், இஸ்ரவேல் ஜனங்கள் இன்னொரு தலைவனை தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ விக்கிரக வழிபாட்டுக்குத் திரும்பினார்கள். நீங்கள் உங்களைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் ஊழியக்காரர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ, அது சீக்கிரம் விக்கிரக வழிபாடாய் மாறிவிடும். .தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். உங்கள் ஊழியக்காரர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுங்கள். ஆனால் உங்கள் நம்பிக்கையை அவர்கள்மேல் வைக்காதீர்கள்.

ஒருவேளை உங்கள் நம்பிக்கையை உங்கள் சபை உபதேசத்தின்மேல் வைத்திருக்கிறீர்களோ? இல்லை, நீங்கள் செய்கிற சில ஆவிக்குரிய காரியங்கள் மேல் உங்கள் நம்பிக்கை இருக்கிறதா?

இந்த உலகத்தில் மாறாத ஒருவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். உலகம் தோன்றின நாள்முதல் உலகத்தின் கடைசி நாள்வரை மாறாதவர் அவர் ஒருவரே. அவரில் மாத்திரம் உங்கள் நம்பிக்கையை வைப்பீர்களா? ஏனென்றால் உங்கள் விசுவாசம் விலையேறப்பெற்றது. அப்படிப்பட்ட அருமையான உங்கள் விசுவாசத்தை அழிந்து போகிற மனிதர்கள் மேலும், மாறும் உபதேசங்கள் மேலும் வைக்காமல், மாறாதவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் மாத்திரம் வைப்பீர்களா? அப்படி வைப்பீர்களானால், சங்கீதக்காரனோடு சேர்ந்து சொல்லலாமா?

இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. சங்கீதம் 39:7

என் நம்பிக்கை