13. விசுவாசம்-உணர்ச்சிகள் அல்ல

அநேக நேரங்களில் நம்முடைய பிரச்னை என்னவென்றால், நம்முடைய உணர்ச்சிகளுக்கும், விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போவது தான். ஒரு காரியத்திற்காக அழுது அழுது ஜெபம் பண்ணுகிறோம்; பண்ணின உடனே, மனம் சமாதானமாக இருக்கிறது. உடனே, அதை விசுவாசம் என்று நினைத்து திருப்தியாகி விடுவோம்.

உலகத்தில் பார்க்கிறோம். ஒரு துக்க காரியம் நடந்தால், வாய் விட்டு அழுகிறார்கள். ஏன்? அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா? அதேபோல நாம் கதறி அழுது ஜெபம் பண்ணும்போது, நமக்கு ஒரு சமாதானம் உண்டாகிறது. அது உணர்ச்சிகள் (ஃபீலிங்க்ஸ் – feelings) அடிப்படையில் ஏற்படுகிற ஒன்று. அது விசுவாசம் இல்லை.

இப்படி சொல்வது அநேகருக்கு கோபத்தை உண்டாக்கும். ஏன், அப்படி கொஞ்ச நேரம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு, அது விசுவாசம் என்று நினைத்தால் தவறா என்று சண்டைக்கு வருவார்கள்; வந்திருக்கிறார்கள். ஆனால், இது உங்களைக் குற்றப்படுத்தவோ, இல்லை, உங்களுக்குள் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லவோ இல்லை. இது நம்முடைய நன்மைக்காகவே. எப்படி என்று வேத வசனத்தின் மூலம் சொல்கிறேன்.

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.  அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. 
– யாக்கோபு 1:6-7

யாக்கோபு சொல்கிறார் – நாம் கேட்கும்போது விசுவாசத்தோடு கேட்கவேண்டும். சந்தேகப்படும்போது, நாம் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலை போலிருக்கிறோம். நமக்குத் தெரியும், காற்று வீசும்போது, அலைகள் மேலே போகும், உடனே கீழே வரும், மீண்டும் மேலே போகும், திரும்பவும் கீழே வரும். இது உலக நியதி. ஆனால் இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது எப்படியாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூட கூடாது என்று யாக்கோபு சொல்கிறார்.

ஒருவேளை நாம் உணர்ச்சிகளை விசுவாசம் என்று நினைத்தால், இது தான் பிரச்னை. நம்முடைய உணர்ச்சிகள் மாறும். நாம் மனிதர்கள். எனவே, எந்த ஒரு சின்ன காரியம் கூட நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலத்தில் சோர்ந்து போவார்கள்; “டல்லா இருக்குது” என்று சொல்வார்கள். சிலருக்கு மழைக்காலத்தில் அப்படி இருக்கும். கொஞ்சம் சீதோஷண நிலைமை மாறினாலே, நம்முடைய உணர்ச்சிகள் மாறும். ஏன், நாம் சாப்பிடுகிற உணவு கூட நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும். கேட்கும் பாடல்கள் நம்மை பாதிக்கும். உற்சாகமான பாடல்களைக் கேட்கும்போது, உற்சாகமாக மேலே போகிறோம். துக்கமான பாடல்களைக் கேட்கும்போது, கீழே வந்து விடுகிறோம். கடல் அலைகள்போல மேலே போய், கீழே வருகிறோம்.

அப்பொழுது என்ன ஆகிறது? ஜெபம் பண்ணிவிட்டு உற்சாகமாய் இருக்கிறோம். உணர்ச்சிகள் அடிப்படையில் விசுவாசத்தை நினைக்கும்போது, ரொம்ப விசுவாசத்தோடு இருக்கிறதாக நினைக்கிறோம். அப்பொழுது நாம் கடல் அலை மேலே போவதுபோல போகிறோம். கொஞ்ச நேரம் கழித்தோ, மறுநாள் எழுந்திருக்கும்போதோ, “டல்லாக மனசு இருக்கிறது” என்று சொல்கிறோம். சோர்ந்து போகிறோம். இப்போது, கடல் அலைகள் கீழே விழுவதுபோல விழுந்து போகிறோம். பிறகு உற்சாகமான காரியங்கள் நடந்தால், மீண்டும் உற்சாகம். பிறகு மீண்டும் விழுகிறோம். இப்படியே மாறி, மாறி நடக்கும்போது, தேவனிடத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது ஒரு வார்த்தை சொல்வோம்:“அன்னிக்கே எனக்கு மனசில ஒரு டவுட் (doubt) இருந்திச்சு. அதே மாதிரி ஆயிடுச்சு, பாரேன்.”

இன்றைக்குத் தீர்மானிப்போம் – நம்முடைய உணர்ச்சிகள் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்போம். ஆமென்.

யாக்கோபு 1.6_7

Advertisements