9. விசுவாசம்-கிரியைகளில்லாமல்

கிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசம். – யாக்கோபு 2:20

அநேக நேரங்களில் இந்த வசனம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, இல்லையென்றால் பயன்படுத்தப்படுவதே இல்லை. ஒரு சிலர் சொல்வார்கள்: நான் விசுவாசிக்கிறேன், என் விசுவாசம் உறுதியாக ஆண்டவர்மேல் இருக்கிறது என்று. ஆனால் அதை எந்த கிரியைகளிலும் அவர்களால் காட்ட முடியாது.

இன்னொரு பக்கம் சிலர், கிரியைகளை தான் விசுவாசம் என்று நினைத்துக் கொண்டு, யாராவது அதிகமாய் ஜெபம் பண்ணினால், அவர்களுக்கு விசுவாசம் அதிகம் என்றும், யாராவது வைராக்கியமாய் பேசினால், உடனே அவர்களைப்போல விசுவாசம் யாருக்கும் இல்லை என்றும் சொல்வார்கள்.

நாம் வலதுபுறம் சாயாமலும், இடதுபுறம் சாயாமலும், நேர் வழியே நடத்துகிற தேவன் நம்மை விசுவாசத்திலும் செம்மையான பாதையில் நடத்துவாராக.

என்ன கிரியைகளைப் பற்றி வேதம் சொல்கிறது? நான் என்ன விசுவாசிக்கிறேனோ, அதை கிரியைகளில் காட்ட வேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இப்போது எல்லாம் ஆராதனைக்கு வருகிறவர்கள் மறக்காமல் எடுத்து வருகிற ஒரு காரியம் – பைபிள் மட்டுமல்ல, செல்ஃபோனும். செல்ஃபோன் இல்லாமல் தேவாலயத்துக்கு வருகிறவர்கள் ஒரு சிலரே.

அந்த செல்ஃபோன் ‘ஆஃப்’ செய்யப்பட்டிருக்காது. அது ‘ஸைலண்ட்’ –இல் இருக்கும். அந்த நேரத்தில் யாராவது ஃபோன் பண்ணினாலோ, இல்லை எஸ்எம்எஸ் அனுப்பினாலோ, தெரிய வேண்டுமே. அதே போல, அந்த செல்ஃபோன் எங்கே இருக்கும் – பைபிள்மேலே இருக்கும். முழந்தாளிட்டு தலையை குனிந்து பயபக்தியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தால், செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திடீர் என்று பார்த்தால், வெளியே போவார்கள் – முக்கியமான ஃபோன் வந்திருக்குமாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? யாராவது சொந்தக்காரர்கள் இறந்து விட்டார்கள் என்ற ஃபோனா? அப்படி எதுவும் இல்லை. ஒருவேளை பரலோகத்தில் இருந்து, கர்த்தர் இவர்களுக்கு ஃபோன் பண்ணினாரோ, அப்படியும் இல்லை.

ஆனால் பாடுவது என்னவாக இருக்கும்? “நீர் மாத்திரம் போதும்; நீரே பெரியவர், உமக்கொப்பானவர் ஒருவரும் இல்லை; ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும், நான் குணமடைவேன்; நீர் சொன்னால் போதும், செய்வேன்.பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், நீர் மட்டும் வேண்டும்.” இதை எல்லாம் விசுவாசத்துடன் தான் பாடுவார்கள். ஆனால் அவர்கள் கிரியைகள் இந்த விசுவாசம் செத்த விசுவாசம் என்று காட்டுகிறது. உங்கள் கிரியைகள் உங்கள் விசுவாசத்தைக் குறித்து என்ன சொல்கிறது?

வேதம் இப்படி சொல்கிறது: தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. – யாக்கோபு 2:19

பிசாசுகள் கூட நடுங்குகிறது… நாம்?

யாக்கோபு 2.20

Advertisements