உபத்திரவத்திற்கு முன்…

நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். – சங்கீதம் 119:67

நான் வழிதப்பி நடந்தேன். இப்படி சொன்னாலே, இன்று கிறிஸ்தவ உலகம் கூட நம்மைத் தப்பாகப் பார்க்கும். ஏனென்றால், வழிதப்பி நடந்தேன் என்று சொன்னாலே, நாம் பிறரை ஏமாற்றி விட்டோம், திருடி விட்டோம், இச்சையோடு பிறரிடம் பழகினோம், விபசாரம் செய்து விட்டோம் என்று உலகத்தின் போக்கோடு மாத்திரம் பார்க்க நாம் பழகிக் கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் காட்டிலும் ஒரு மேலான தரம் உடையது.

உலகத்தின் பார்வையில் பாவம் என்று சொல்லப்படுகிற ஒன்றையும் நாம் செய்யாமல் இருக்கலாம். ஏன், இந்த உலகம் மெச்சிக்கொள்கிற காரியங்களை நாம் செய்து, உலகத்தால் பாராட்டப்படக் கூடிய ஒரு வாழ்க்கையைக்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும், நம்முடைய தேவனின் பார்வையில் நாம் வழிதப்பி நடக்கிறவர்களாக இருக்கலாம்.

ஏசாயா தீர்க்கதரிசி இதை அழகாக 53-ஆம் அதிகாரம், 6-ஆம்  வசனத்தில்  சொல்கிறார்.  நாம்  எல்லாரும்  வழிதப்பித் திரிந்தோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு  விளக்கமும்  தருகிறார். அவனவன் தன்தன் வழியிலே போனோம் என்று சொல்கிறார். தீய வழியில் போனோம் என்று சொல்லவில்லை, தன்தன் வழியிலே போனோம். மெய்யான வழியாகிய இயேசு கிறிஸ்துவை விட்டு, நம் சொந்த வழிகளிலே போனோம்.

சிற்சில வேளைகளில், நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்டு, நம் தவறை உணர்ந்தவர்களாய்,, அவருடைய வழிக்குத் திரும்பி விடுகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் போகும் பாதை நமக்குத் தவறாகத் தெரிவதில்லை; எல்லாரும் நாம் வாழ்கிற விதத்தைக் குறித்து பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் நன்றாக வாய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அதை எல்லாம் விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் பின்னே நடப்பது உலகத்தின் பார்வைக்கும், நம்முடைய பார்வைக்கும் கூட முட்டாள்த்தனமாகவேத் தெரியும். அந்த நேரங்களில், நம்முடைய பரம தகப்பன் தம்முடைய அன்பின் கரங்களால், நம்மை சற்று உபத்திரவத்திற்குள் நடத்தும்போது, நாம் அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறோம்.

பரலோக தகப்பனே, உம்முடைய அளவற்ற அன்புக்காக, கிருபைக்காக, நன்றி. நல்ல மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தாலே, உம்மை நன்றியோடு துதிக்கிறோம். எங்கள் வழிகளின் தவறுகளை நாங்கள் உணரும்படி, உம்முடைய அன்பினாலே, உபத்திரவங்களை எங்களுக்கு அனுமதித்தீரே, அதற்காகவும் நன்றி. இப்பொழுதோ நாங்கள் உம்முடைய வார்த்தைகளைக் காத்து நடக்கிறோம். நன்றி அப்பா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

சங்கீதம் 119_67

ஆதியாகமம் 22:8

தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்.

ஒரு வயதான தகப்பன். அவருடைய ஒரே மகன். 3-நாட்கள் மனதளவில் போராட்டத்தோடு ஒரு கொடிய பயணம். அந்த பயணத்தின் முடிவில் காத்திருப்பது இருதயத்தை உடைக்கக் கூடிய ஒரு தியாகம். மோரியா மலையின் அடிவாரத்தில் இருக்கச் சொன்ன இரண்டு வேலைக்காரர்களுக்கும் ஒரு கேள்வி உண்டு. ஆனால் வயதான தங்கள் எஜமானனிடம் கேட்க தைரியம் இல்லை. எங்கே அப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர் இருக்க, கடைசியில் யார் கேட்கக் கூடாதோ, அந்த வாலிப மகன் கேட்டே விடுகிறான்: தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே??? துக்கத்தில் நொறுங்கிக்கொண்டிருக்கும் இருதயத்தில் இருந்து விசுவாச வார்த்தைகள் வெடித்துக் கிளம்புகிறது: தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார். ஆம், கர்த்தர் பார்த்துக்கொண்டார். முதலில் மோரியா மலையில். இரண்டாவது கல்வாரி மலையில். கர்த்தர் பார்த்துக்கொண்டார்.

வாழ்க்கையின் போராட்டங்கள் மிகுதியாகி உன்னால் சமாளிக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்போது, கல்வாரியை நோக்கிப் பார். எல்லா திசைகளிலும் நெருக்கப்படும்போது, கண்களை உயர்த்தி, சிலுவையின் மேல் உன் கண்களைப் பதிய வை. பாவச்சேற்றினில் சிக்குண்டு, தேவனின் சமுகத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் தவிக்கும்போது, இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப்பார். உண்மையான அன்புக்கு ஏங்குகிறாயோ? தம் ஒரேபேறான குமாரனையே தந்தருளுமளவுக்கு உன்னை உண்மையாய் நேசித்த பரலோக பிதாவை நோக்கிப்பார். அவர் யெஹோவா யீரே – எல்லாம் பார்த்துக்கொள்வார்.

ஆதியாகமம் 22_8

பிலிப்பியர் 4:6

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

1. கவலைப்படாதேயுங்கள். ஒன்றுக்கும் கவலைப்படாதேயுங்கள். ஏனென்றால், தேவன் சமீபமாயிருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கிறதைக் காட்டிலும், நீங்கள் உணர்வதைக் காட்டிலும், தேவன் உங்களுக்கு சமீபமாய் இருக்கிறார். உங்கள் சூழ்நிலைகள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், கவலைப்படாதேயுங்கள், சூழ்நிலைகளை மாற்றுகிறவர் உங்களுக்குச் சமீபமாயிருக்கிறார்.

2. ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் உங்கள் விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். இன்று தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதது ஒரு வேதனையான காரியம். ஜெபம், வேண்டுதல், விண்ணப்பம் – இந்த மூன்றும் இன்று கிறிஸ்தவ உலகில் ஒன்றாகவே கருதப்படுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாகச் சொல்கிறார் – உங்கள் விண்ணப்பங்களை, ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள் என்று.

3. ஸ்தோத்திரத்தோடே கூடிய – இன்று தமிழ் கிறிஸ்தவ உலகில் ஸ்தோத்திரம் சொல்வது என்பது ஒரு மந்திரம் போல ஆகிவிட்டது. என்ன ஆனாலும், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் ஜெபங்கள் கேட்கப்படும் என்ற முட்டாள்தனமான போதனைகள் இன்று போதிக்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு சகோதரி தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆனால் விடாமல் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். வேதனையான காரியம். உங்கள் ஸ்தோத்திரங்கள் அர்த்தமுள்ளவைகளாய் இருக்கட்டுமே.

பிலிப்பியர் 4_6

ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்திலிருந்து சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்களிலே, கிறிஸ்தவர்கள் தான் அதிகம் சமாதானம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறதை நாம் பார்க்கிறோம். அதிகப்படியான மனச்சோர்வும் (depression), அழுத்தமும் (pressure) சதவீத அளவில் கிறிஸ்தவர்களை தான் பிறரைக் காட்டிலும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அதற்குப் பதில் – விசுவாசத்தினாலே நீதிமான்கள்.

நீங்கள் நீதிமான் என்று அறிந்திருக்கிறீர்களா? எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா? விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா? கிறிஸ்து இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே விசுவாசிக்கிறீர்களா, அல்லது உங்கள் பரிசுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கிறீர்களா?

நாம் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருந்தோமானால், தேவனுடைய சமாதானம் நம்மோடு தங்கியிருக்கும். ஏனென்றால் நம்முடைய பிதாவும், இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவுமாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கும் எவரையும் நேசிக்கிறார். அவர் தாமே கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்துவை எனக்காகவும் உங்களுக்காகவும் ஒப்புக்கொடுத்தார். அந்த பரிகாரியாகிய இயேசுவை விசுவாசிப்போம்; நீதிமான்களாவோம்; தேவனிடத்தில் இருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

ரோமர் 5_1

11.விசுவாசம்-தேவன் அன்பாகவே இருக்கிறார்

கடந்த முறை சொன்னேன், விசுவாசம் என்பது கர்த்தர் தேவன் என்று ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஆனால் நாம் விசுவாசிக்கிற ஜீவனுள்ள கர்த்தர் சர்வ பூமிக்கும் ஆண்டவர் மாத்திரமல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4.8

நாம் விசுவாசத்தில் வளரவேண்டுமானால், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதை நாம் உணரவேண்டும். அந்த அன்பை நாம் உணர்ந்தோமானால், விசுவாசம் பெருகும்; ஏனென்றால், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (1 கொரிந்தியர் 13:7) என்பது வேத சத்தியம்.

நாம் அன்பை நம்முடைய வழிகளில் உணர பார்க்கிறோம். ஒரு குழந்தை தன் தாயைக் காட்டிலும் தன் தகப்பனை நேசித்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். தகப்பன் அந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறார். ஆகவே அந்த பிள்ளை தகப்பனை அதிகம் நேசிக்கிறது. ஆனால் அநேக பிள்ளைகள் கெட்டுப் போகிறதற்கு காரணம் இப்படி செல்லம் கொடுக்கிற பெற்றோர் தான். அதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் தேவனிடத்தில் இருந்து அதே போன்ற அன்பை தான் எதிர்பார்க்கிறோம். நான் என்ன கேட்கிறேனோ, அதை அவர் உடனே தந்துவிட வேண்டும். இல்லையென்றால், அவருடைய அன்பு பொய்.

ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். அதை நாம் நிச்சயம் உணரவேண்டும். அந்த தெளிவு இல்லாமல் நம்மால் விசுவாசத்தில் வளர முடியாது. நான் விரும்புகிற காரியங்களைக் கொடுக்கும்போதும், கர்த்தர் அன்பானவரே; அவற்றைத் தராமல் இருக்கும்போதும், அவர் அன்பானவரே. நான் விரும்பாத காரியங்களை என் வாழ்க்கையில் வராமல் தடுக்கும்போது, கர்த்தர் அன்பானவரே; அவற்றை என் வாழ்க்கையில் அனுமதிக்கும்போதும் கர்த்தர் அன்பானவரே.

அப்படி என்றால் நான் எப்படி அவருடைய அன்பில், அதனால் வரும் விசுவாசத்தில் வளர முடியும்? அதற்கு கர்த்தர் நான் கேட்ட காரியங்களுக்கு எப்படி பதில் தந்தார் என்பதில் இருந்து உணர முடியாது. நான் கேட்காமலே அவர் எனக்குத் தந்தார், பாருங்கள், ஒரு அருமையான புதையலை – அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரை, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப் பார்க்கும்போது, தேவனுடைய அன்பு விளங்கும்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். – யோவான் 3:16

கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நோக்கிப்பாருங்கள். அதே வேளையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவலக்குரல் எழும்பினபோது, தம் சொந்த குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் கைவிடப்படக் கூடாதபடிக்கு, நம்மேல் அன்புகூர்ந்த தேவனை நோக்கிப்பாருங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்மேல் அன்பாகவே இருக்கிறார். விசுவாசி.

யோவான் 3-16

10. விசுவாசம்-கர்த்தர் தேவன்

கர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.

ஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.

அவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது:  பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.

சங்கீதம் 24.1-2

கர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா? உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா? அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா?

கர்த்தர் அறிவார்

ஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.

2. விசுவாசம்–தேவனைப் பற்றியது

நேற்று விசுவாசம் என்பது நம்மைப் பற்றினது அல்ல என்று பார்த்தோம். அப்போது விசுவாசம் என்பது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று கேட்டால், விசுவாசம் என்பது தேவனைப் பற்றியது. வேதம் சொல்கிறது:
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். – எபிரேயர் 11:6

நம் வாழ்க்கையில் ஆயிரம் புண்ணிய காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்கள் செய்யலாம். அவை எல்லாவற்றையும் தேவன் அங்கிகரிக்கிறார் என்று தான் நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விசுவாசமில்லாமல் அவைகளைச் செய்யும்போது, கர்த்தர் அதில் பிரியப்பட மாட்டார்.

எபிரேயர் 11.6

காயீனும் காணிக்கைகளைக் கொண்டுவந்தான். ஆபேலும் கர்த்தருக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தான். ஆனால் கர்த்தர் ஆபேலின் காணிக்கைகளை மட்டுமே அங்கிகரித்தார். காயீனுடைய காணிக்கைகளை அங்கிகரிக்கவில்லை. அதற்கு வேத வல்லுனர்களும், பிரசங்கியார்களும், ஊழியக்காரர்களும் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் வேதம் ஒரு காரியம் சொல்கிறது.
விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். – எபிரேயர் 11:4.

நாம் கர்த்தருக்குச் செய்யும் எந்த காரியமாகட்டும், அதில் விசுவாசம் இருந்தால் மாத்திரமே அது மேன்மையான பலியாக, கர்த்தர் ஏற்றுக்கொள்கிற பலியாக, கர்த்தருக்குப் பிரியமானதாய் இருக்கும். ஆனால் இது வெறும் ஞாயிற்றுக்கிழமை நாம் செய்கிற சில ஆவிக்குரிய காரியங்களை அடுத்தது அல்ல.

விசுவாசம் என்பது நம் தினந்தோறும் வாழ்க்கையில் நமக்கு இருக்க வேண்டிய உயிர் மூச்சு. நம்மை இயங்க வைக்கிற இதயத்துடிப்பாக விசுவாசம் இருக்கிறது. நம்முடைய இரத்த நாளங்களில் பாய்கின்ற இரத்தம் ஒரு கிறிஸ்தவ சகோதரனுக்கோ, சகோதரிக்கோ, அவனுடைய, அவளுடைய விசுவாசமே.

யோசித்துப்பாருங்கள். விசுவாசத்தினால் மாத்திரமே தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியும். அந்த விசுவாசமே நம்முடைய உயிர்த்துடிப்பாய் இருந்தால், நம் வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமாகும். ஆவிக்குரிய வாழ்க்கை மாத்திரம் அல்ல, நம்முடைய ஜெப ஜீவியம் மட்டும் அல்ல, நம்முடைய தினந்தோறும் வாழ்க்கையே தேவனுக்குப் பிரியமான வாழ்க்கையாக மாறும்.

நீ ஒருவேளை படிக்கிற பிள்ளையாக இருக்கலாம். விசுவாசத்தோடு நீ அதைப் படிப்பாயானால், அது கர்த்தருக்குப் பிரியமான படிப்பாய் இருக்கும். நீ வேலை செய்துக் கொண்டிருக்கலாம். அந்த வேலையையும் விசுவாசத்தோடு செய்தால், அது கர்த்தரைப் பிரியப்படுத்தும். அல்லது நீ வீட்டிலே முடக்கப்பட்டிருக்கலாம். அதில் கூட நீ விசுவாசத்தோடு இருக்கும்போது, அந்த தனிமை கூட தேவனைப் பிரியப்படுத்தும். சிறையில்  கூட எப்படி  யோசேப்பு தேவனுக்குப் பிரியமாய் இருந்தான், விசுவாசத்தினால் தன்னைக் காத்துக்கொண்டதால் அல்லவா?

அப்படி என்றால், நீ எங்கே இருக்கிறாய், என்ன நிலைமையில் இருக்கிறாய் என்பது ஒரு தடையே இல்லை. நீ தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். உன்னில் தேவன் சந்தோஷப்படுவார். ஏனென்றால் மெய்யான விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்தும். ஆம், விசுவாசம் தேவனைப் பற்றியது.

ஆகவே தான், அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்: அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. – ரோமர் 12:1.

தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக. வெறும் பரிசுத்தம் தேவனைப் பிரியப்படுத்தாது. விசுவாசமும் வேண்டும். அப்படிப்பட்ட புத்தியுள்ள ஆராதனையை செய்ய நம்மை இந்த வேளையில் அர்ப்பணிப்போமா?

பரம பிதாவே, எங்கள் விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த வேளையில் என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கிறேன். என் சரீரத்தைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறேன். ஒவ்வொரு நாளும் உம்மைப் பிரியப்படுத்துகிற விசுவாச வாழ்க்கையை நான் வாழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், பிதாவே, ஆமென்.

ஜீவபலி