10. விசுவாசம்-கர்த்தர் தேவன்

கர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.

ஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.

அவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது:  பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.

சங்கீதம் 24.1-2

கர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா? உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா? அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா?

கர்த்தர் அறிவார்

ஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.

Advertisements