ரோமர் 5:1

இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

ஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்திலிருந்து சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்களிலே, கிறிஸ்தவர்கள் தான் அதிகம் சமாதானம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறதை நாம் பார்க்கிறோம். அதிகப்படியான மனச்சோர்வும் (depression), அழுத்தமும் (pressure) சதவீத அளவில் கிறிஸ்தவர்களை தான் பிறரைக் காட்டிலும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அதற்குப் பதில் – விசுவாசத்தினாலே நீதிமான்கள்.

நீங்கள் நீதிமான் என்று அறிந்திருக்கிறீர்களா? எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா? விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா? கிறிஸ்து இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே விசுவாசிக்கிறீர்களா, அல்லது உங்கள் பரிசுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கிறீர்களா?

நாம் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருந்தோமானால், தேவனுடைய சமாதானம் நம்மோடு தங்கியிருக்கும். ஏனென்றால் நம்முடைய பிதாவும், இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவுமாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கும் எவரையும் நேசிக்கிறார். அவர் தாமே கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்துவை எனக்காகவும் உங்களுக்காகவும் ஒப்புக்கொடுத்தார். அந்த பரிகாரியாகிய இயேசுவை விசுவாசிப்போம்; நீதிமான்களாவோம்; தேவனிடத்தில் இருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

ரோமர் 5_1

Advertisements

13. விசுவாசம்-உணர்ச்சிகள் அல்ல

அநேக நேரங்களில் நம்முடைய பிரச்னை என்னவென்றால், நம்முடைய உணர்ச்சிகளுக்கும், விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போவது தான். ஒரு காரியத்திற்காக அழுது அழுது ஜெபம் பண்ணுகிறோம்; பண்ணின உடனே, மனம் சமாதானமாக இருக்கிறது. உடனே, அதை விசுவாசம் என்று நினைத்து திருப்தியாகி விடுவோம்.

உலகத்தில் பார்க்கிறோம். ஒரு துக்க காரியம் நடந்தால், வாய் விட்டு அழுகிறார்கள். ஏன்? அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா? அதேபோல நாம் கதறி அழுது ஜெபம் பண்ணும்போது, நமக்கு ஒரு சமாதானம் உண்டாகிறது. அது உணர்ச்சிகள் (ஃபீலிங்க்ஸ் – feelings) அடிப்படையில் ஏற்படுகிற ஒன்று. அது விசுவாசம் இல்லை.

இப்படி சொல்வது அநேகருக்கு கோபத்தை உண்டாக்கும். ஏன், அப்படி கொஞ்ச நேரம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு, அது விசுவாசம் என்று நினைத்தால் தவறா என்று சண்டைக்கு வருவார்கள்; வந்திருக்கிறார்கள். ஆனால், இது உங்களைக் குற்றப்படுத்தவோ, இல்லை, உங்களுக்குள் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லவோ இல்லை. இது நம்முடைய நன்மைக்காகவே. எப்படி என்று வேத வசனத்தின் மூலம் சொல்கிறேன்.

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.  அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. 
– யாக்கோபு 1:6-7

யாக்கோபு சொல்கிறார் – நாம் கேட்கும்போது விசுவாசத்தோடு கேட்கவேண்டும். சந்தேகப்படும்போது, நாம் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலை போலிருக்கிறோம். நமக்குத் தெரியும், காற்று வீசும்போது, அலைகள் மேலே போகும், உடனே கீழே வரும், மீண்டும் மேலே போகும், திரும்பவும் கீழே வரும். இது உலக நியதி. ஆனால் இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது எப்படியாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூட கூடாது என்று யாக்கோபு சொல்கிறார்.

ஒருவேளை நாம் உணர்ச்சிகளை விசுவாசம் என்று நினைத்தால், இது தான் பிரச்னை. நம்முடைய உணர்ச்சிகள் மாறும். நாம் மனிதர்கள். எனவே, எந்த ஒரு சின்ன காரியம் கூட நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலத்தில் சோர்ந்து போவார்கள்; “டல்லா இருக்குது” என்று சொல்வார்கள். சிலருக்கு மழைக்காலத்தில் அப்படி இருக்கும். கொஞ்சம் சீதோஷண நிலைமை மாறினாலே, நம்முடைய உணர்ச்சிகள் மாறும். ஏன், நாம் சாப்பிடுகிற உணவு கூட நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும். கேட்கும் பாடல்கள் நம்மை பாதிக்கும். உற்சாகமான பாடல்களைக் கேட்கும்போது, உற்சாகமாக மேலே போகிறோம். துக்கமான பாடல்களைக் கேட்கும்போது, கீழே வந்து விடுகிறோம். கடல் அலைகள்போல மேலே போய், கீழே வருகிறோம்.

அப்பொழுது என்ன ஆகிறது? ஜெபம் பண்ணிவிட்டு உற்சாகமாய் இருக்கிறோம். உணர்ச்சிகள் அடிப்படையில் விசுவாசத்தை நினைக்கும்போது, ரொம்ப விசுவாசத்தோடு இருக்கிறதாக நினைக்கிறோம். அப்பொழுது நாம் கடல் அலை மேலே போவதுபோல போகிறோம். கொஞ்ச நேரம் கழித்தோ, மறுநாள் எழுந்திருக்கும்போதோ, “டல்லாக மனசு இருக்கிறது” என்று சொல்கிறோம். சோர்ந்து போகிறோம். இப்போது, கடல் அலைகள் கீழே விழுவதுபோல விழுந்து போகிறோம். பிறகு உற்சாகமான காரியங்கள் நடந்தால், மீண்டும் உற்சாகம். பிறகு மீண்டும் விழுகிறோம். இப்படியே மாறி, மாறி நடக்கும்போது, தேவனிடத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது ஒரு வார்த்தை சொல்வோம்:“அன்னிக்கே எனக்கு மனசில ஒரு டவுட் (doubt) இருந்திச்சு. அதே மாதிரி ஆயிடுச்சு, பாரேன்.”

இன்றைக்குத் தீர்மானிப்போம் – நம்முடைய உணர்ச்சிகள் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்போம். ஆமென்.

யாக்கோபு 1.6_7

12. விசுவாசம்–கர்த்தர் நல்லவர்

கடந்த முறை, விசுவாசம் என்பது தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது என்று பார்த்தோம். அவர் நம்பேரில் அன்பாகவே இருக்கிறார் மாத்திரமல்ல, அவர் நல்லவராகவும் இருக்கிறார்.

அநேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்: கர்த்தருக்கு என்மேல் அன்பு உண்டுதான். அவர் அன்பானவர் தான். ஆனால் எனக்கு அவர் நல்லவராக இருந்ததில்லை. ஏனென்றால் என் வாழ்க்கையில் நன்மை என்று நான் ஒன்றுமே பார்த்ததில்லை.

எப்படி கர்த்தர் அன்பானவர் என்பது அவருடைய மாறாத குணாதிசயமோ, அப்படியே அவர் நல்லவர் என்பதும் அவருடைய அடிப்படை குணங்களில் ஒன்றாயிருக்கிறது. நாம் அதை நமக்கு நடக்கிற காரியங்களை வைத்து, தீர்மானிக்க முடியாது; தீர்மானிக்கவும் கூடாது. இது நாம் ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொள்கிற ஒரு காரியம் அல்ல. ஏனென்றால் உலகத்தில் நடக்கிற கேடான காரியங்களைப் பார்த்து, ஆராய்ந்து முடிவு செய்தால், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விதான் எழும்பும்.

ஆனால் கர்த்தர் நல்லவர். அதற்கு உலக வழக்கத்தின்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு சினிமாவில், ஒரு நடிகனை அநேகர் அடிப்பார்கள். ஆனால் அவன் திரும்ப அடிக்கவோ, ஏன் ஒரு சத்தம் கூட கொடுக்க மாட்டான். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்கும்போது அவன் சொல்வான்: “ஏன்னா என்னை அடிக்கும்போது, இவர் ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாங்க”.

என் பாவங்கள்

அப்பொழுது யோசித்துப் பாருங்கள். கல்வாரியில் இயேசு பட்ட பாடுகளைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையையோ, உலகத்தில் நடக்கிறவையோ நோக்கிப் பார்ப்பதை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பாடுகளைப் பாருங்கள். அவ்வளவு பாடுகளின் மத்தியிலும், உங்களையும் என்னையும் நேசித்தவரை நோக்கிப் பாருங்கள். நம் பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும் அடிபட்டு, வதைக்கப்பட்டவரைப் பாருங்கள். அதின் நடுவிலும், உங்களையும் என்னையும் பார்த்து, திருப்தி அடைந்தவரைப் பாருங்கள். கர்த்தர் நல்லவர். விசுவாசியுங்கள்.

கர்த்தர் நல்லவர்

11.விசுவாசம்-தேவனின் அன்பு… தொடர்ச்சி

நேற்று தேவன் அன்பாகவே இருக்கிறார் oswald-chambersஎன்று சொன்னேன். அதன் தொடர்ச்சியாக, ஒரே ஒரு காரியம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் என்கிற தேவ மனிதர் சொன்ன ஒரு காரியம்.

என் விடுதலைக்காக மட்டும் விசுவாசிக்கிறேன் என்றால் அது தேவன்மேல் உள்ள விசுவாசமல்ல. விசுவாசம் என்றால், நான் வெளிப்படையாக விடுவிக்கப்படுகிறேனோ, இல்லையோ, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்ற என் நம்பிக்கையில் நான் மாறுவதில்லை. சில காரியங்களை எரிகிற அக்கினி சூளையிலிருந்து மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்.

11.விசுவாசம்-தேவன் அன்பாகவே இருக்கிறார்

கடந்த முறை சொன்னேன், விசுவாசம் என்பது கர்த்தர் தேவன் என்று ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஆனால் நாம் விசுவாசிக்கிற ஜீவனுள்ள கர்த்தர் சர்வ பூமிக்கும் ஆண்டவர் மாத்திரமல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4.8

நாம் விசுவாசத்தில் வளரவேண்டுமானால், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதை நாம் உணரவேண்டும். அந்த அன்பை நாம் உணர்ந்தோமானால், விசுவாசம் பெருகும்; ஏனென்றால், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (1 கொரிந்தியர் 13:7) என்பது வேத சத்தியம்.

நாம் அன்பை நம்முடைய வழிகளில் உணர பார்க்கிறோம். ஒரு குழந்தை தன் தாயைக் காட்டிலும் தன் தகப்பனை நேசித்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். தகப்பன் அந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறார். ஆகவே அந்த பிள்ளை தகப்பனை அதிகம் நேசிக்கிறது. ஆனால் அநேக பிள்ளைகள் கெட்டுப் போகிறதற்கு காரணம் இப்படி செல்லம் கொடுக்கிற பெற்றோர் தான். அதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் தேவனிடத்தில் இருந்து அதே போன்ற அன்பை தான் எதிர்பார்க்கிறோம். நான் என்ன கேட்கிறேனோ, அதை அவர் உடனே தந்துவிட வேண்டும். இல்லையென்றால், அவருடைய அன்பு பொய்.

ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். அதை நாம் நிச்சயம் உணரவேண்டும். அந்த தெளிவு இல்லாமல் நம்மால் விசுவாசத்தில் வளர முடியாது. நான் விரும்புகிற காரியங்களைக் கொடுக்கும்போதும், கர்த்தர் அன்பானவரே; அவற்றைத் தராமல் இருக்கும்போதும், அவர் அன்பானவரே. நான் விரும்பாத காரியங்களை என் வாழ்க்கையில் வராமல் தடுக்கும்போது, கர்த்தர் அன்பானவரே; அவற்றை என் வாழ்க்கையில் அனுமதிக்கும்போதும் கர்த்தர் அன்பானவரே.

அப்படி என்றால் நான் எப்படி அவருடைய அன்பில், அதனால் வரும் விசுவாசத்தில் வளர முடியும்? அதற்கு கர்த்தர் நான் கேட்ட காரியங்களுக்கு எப்படி பதில் தந்தார் என்பதில் இருந்து உணர முடியாது. நான் கேட்காமலே அவர் எனக்குத் தந்தார், பாருங்கள், ஒரு அருமையான புதையலை – அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரை, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப் பார்க்கும்போது, தேவனுடைய அன்பு விளங்கும்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். – யோவான் 3:16

கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நோக்கிப்பாருங்கள். அதே வேளையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவலக்குரல் எழும்பினபோது, தம் சொந்த குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் கைவிடப்படக் கூடாதபடிக்கு, நம்மேல் அன்புகூர்ந்த தேவனை நோக்கிப்பாருங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்மேல் அன்பாகவே இருக்கிறார். விசுவாசி.

யோவான் 3-16

10. விசுவாசம்-கர்த்தர் தேவன்

கர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.

ஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.

அவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது:  பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையது என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.

சங்கீதம் 24.1-2

கர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா? உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா? அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா?

கர்த்தர் அறிவார்

ஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.

9. விசுவாசம்-கிரியைகளில்லாமல்

கிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசம். – யாக்கோபு 2:20

அநேக நேரங்களில் இந்த வசனம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, இல்லையென்றால் பயன்படுத்தப்படுவதே இல்லை. ஒரு சிலர் சொல்வார்கள்: நான் விசுவாசிக்கிறேன், என் விசுவாசம் உறுதியாக ஆண்டவர்மேல் இருக்கிறது என்று. ஆனால் அதை எந்த கிரியைகளிலும் அவர்களால் காட்ட முடியாது.

இன்னொரு பக்கம் சிலர், கிரியைகளை தான் விசுவாசம் என்று நினைத்துக் கொண்டு, யாராவது அதிகமாய் ஜெபம் பண்ணினால், அவர்களுக்கு விசுவாசம் அதிகம் என்றும், யாராவது வைராக்கியமாய் பேசினால், உடனே அவர்களைப்போல விசுவாசம் யாருக்கும் இல்லை என்றும் சொல்வார்கள்.

நாம் வலதுபுறம் சாயாமலும், இடதுபுறம் சாயாமலும், நேர் வழியே நடத்துகிற தேவன் நம்மை விசுவாசத்திலும் செம்மையான பாதையில் நடத்துவாராக.

என்ன கிரியைகளைப் பற்றி வேதம் சொல்கிறது? நான் என்ன விசுவாசிக்கிறேனோ, அதை கிரியைகளில் காட்ட வேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இப்போது எல்லாம் ஆராதனைக்கு வருகிறவர்கள் மறக்காமல் எடுத்து வருகிற ஒரு காரியம் – பைபிள் மட்டுமல்ல, செல்ஃபோனும். செல்ஃபோன் இல்லாமல் தேவாலயத்துக்கு வருகிறவர்கள் ஒரு சிலரே.

அந்த செல்ஃபோன் ‘ஆஃப்’ செய்யப்பட்டிருக்காது. அது ‘ஸைலண்ட்’ –இல் இருக்கும். அந்த நேரத்தில் யாராவது ஃபோன் பண்ணினாலோ, இல்லை எஸ்எம்எஸ் அனுப்பினாலோ, தெரிய வேண்டுமே. அதே போல, அந்த செல்ஃபோன் எங்கே இருக்கும் – பைபிள்மேலே இருக்கும். முழந்தாளிட்டு தலையை குனிந்து பயபக்தியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தால், செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திடீர் என்று பார்த்தால், வெளியே போவார்கள் – முக்கியமான ஃபோன் வந்திருக்குமாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? யாராவது சொந்தக்காரர்கள் இறந்து விட்டார்கள் என்ற ஃபோனா? அப்படி எதுவும் இல்லை. ஒருவேளை பரலோகத்தில் இருந்து, கர்த்தர் இவர்களுக்கு ஃபோன் பண்ணினாரோ, அப்படியும் இல்லை.

ஆனால் பாடுவது என்னவாக இருக்கும்? “நீர் மாத்திரம் போதும்; நீரே பெரியவர், உமக்கொப்பானவர் ஒருவரும் இல்லை; ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும், நான் குணமடைவேன்; நீர் சொன்னால் போதும், செய்வேன்.பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், நீர் மட்டும் வேண்டும்.” இதை எல்லாம் விசுவாசத்துடன் தான் பாடுவார்கள். ஆனால் அவர்கள் கிரியைகள் இந்த விசுவாசம் செத்த விசுவாசம் என்று காட்டுகிறது. உங்கள் கிரியைகள் உங்கள் விசுவாசத்தைக் குறித்து என்ன சொல்கிறது?

வேதம் இப்படி சொல்கிறது: தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. – யாக்கோபு 2:19

பிசாசுகள் கூட நடுங்குகிறது… நாம்?

யாக்கோபு 2.20