11.விசுவாசம்-தேவன் அன்பாகவே இருக்கிறார்

கடந்த முறை சொன்னேன், விசுவாசம் என்பது கர்த்தர் தேவன் என்று ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஆனால் நாம் விசுவாசிக்கிற ஜீவனுள்ள கர்த்தர் சர்வ பூமிக்கும் ஆண்டவர் மாத்திரமல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 4.8

நாம் விசுவாசத்தில் வளரவேண்டுமானால், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதை நாம் உணரவேண்டும். அந்த அன்பை நாம் உணர்ந்தோமானால், விசுவாசம் பெருகும்; ஏனென்றால், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (1 கொரிந்தியர் 13:7) என்பது வேத சத்தியம்.

நாம் அன்பை நம்முடைய வழிகளில் உணர பார்க்கிறோம். ஒரு குழந்தை தன் தாயைக் காட்டிலும் தன் தகப்பனை நேசித்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். தகப்பன் அந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறார். ஆகவே அந்த பிள்ளை தகப்பனை அதிகம் நேசிக்கிறது. ஆனால் அநேக பிள்ளைகள் கெட்டுப் போகிறதற்கு காரணம் இப்படி செல்லம் கொடுக்கிற பெற்றோர் தான். அதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் தேவனிடத்தில் இருந்து அதே போன்ற அன்பை தான் எதிர்பார்க்கிறோம். நான் என்ன கேட்கிறேனோ, அதை அவர் உடனே தந்துவிட வேண்டும். இல்லையென்றால், அவருடைய அன்பு பொய்.

ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். அதை நாம் நிச்சயம் உணரவேண்டும். அந்த தெளிவு இல்லாமல் நம்மால் விசுவாசத்தில் வளர முடியாது. நான் விரும்புகிற காரியங்களைக் கொடுக்கும்போதும், கர்த்தர் அன்பானவரே; அவற்றைத் தராமல் இருக்கும்போதும், அவர் அன்பானவரே. நான் விரும்பாத காரியங்களை என் வாழ்க்கையில் வராமல் தடுக்கும்போது, கர்த்தர் அன்பானவரே; அவற்றை என் வாழ்க்கையில் அனுமதிக்கும்போதும் கர்த்தர் அன்பானவரே.

அப்படி என்றால் நான் எப்படி அவருடைய அன்பில், அதனால் வரும் விசுவாசத்தில் வளர முடியும்? அதற்கு கர்த்தர் நான் கேட்ட காரியங்களுக்கு எப்படி பதில் தந்தார் என்பதில் இருந்து உணர முடியாது. நான் கேட்காமலே அவர் எனக்குத் தந்தார், பாருங்கள், ஒரு அருமையான புதையலை – அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரை, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப் பார்க்கும்போது, தேவனுடைய அன்பு விளங்கும்.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். – யோவான் 3:16

கல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நோக்கிப்பாருங்கள். அதே வேளையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவலக்குரல் எழும்பினபோது, தம் சொந்த குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் கைவிடப்படக் கூடாதபடிக்கு, நம்மேல் அன்புகூர்ந்த தேவனை நோக்கிப்பாருங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்மேல் அன்பாகவே இருக்கிறார். விசுவாசி.

யோவான் 3-16