தகப்பனின் அன்பு

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். – நீதிமொழிகள் 3:12

நம் கர்த்தரின் அன்பு, ஒரு தகப்பனின் அன்போடு ஒப்பிடப்படுகிறது. ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைக்குத் தேவையானதைத் தருவார். அதிலே சிட்சையும் அடங்கும். ”தண்டனை” அல்ல, சிட்சை.

1. ஒரு தகப்பன் தன் பிள்ளையை சந்தோஷமாய்ச் சிட்சிக்கிறது இல்லை. அதேப்போல் கர்த்தர் நம்மை மனப்பூர்வமாய் சஞ்சலப்படுத்துகிறது இல்லை. நமக்காகப் பரிதாபப்பட்டு, மனதுருகி, வேறு வழி இல்லாததினால், சிட்சிக்கிறவர் தான் நம் தேவன். ஆகவே, அவர் நம்மை சிட்சிக்கும்போது, நம் மனதில் அவருடைய அன்பையும், மனதுருக்கத்தையும், இரக்கத்தையும், கிருபையையும் நினைத்துக்கொள்வோம்.

2. ஒரு தகப்பன் தன் பிள்ளையை அன்போடு சிட்சிப்பானே அல்லாமல், கொடூரமாய்ச் சிட்சிக்க மாட்டான். நம் கர்த்தரும் நம்மை ஒருநாளும் கொடுமைப்படுத்த மாட்டார். சிற்சில வேளைகளில் நம் திராணிக்கு மீறி அவர் சிட்சிக்கிறதுபோல, நம் பாவங்களைக் காட்டிலும் அவர் கொடுக்கிற சிட்சை அதிகமாய் இருக்கிறதுபோலும் தெரியும். ஆனால் எல்லாவற்றிலும் தேவனின் அன்பின் கரமே நம்மை சிட்சிக்கிறது என்று நாம் மறந்துவிட வேண்டாம்.

3. ஒரு தகப்பன் தன் பிள்ளையின் நலனுக்காகவே சிட்சிக்கிறான். அப்படியே நம் கர்த்தரும் நம்முடைய நலனுக்காகவே நம்மை சிட்சிக்கிறார்.

ஆகவே, கர்த்தர் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர் நம்மிடத்தில் அன்பாய் இருக்கிறார் என்று அறிந்து, கர்த்தரை மகிழ்ச்சியோடு அவரை மகிமைப்படுத்துவோம். நாம் சுத்தப்பொன்னாக விளங்கும்படி அவர் செய்வாராக. ஆமென்.

நீதி 3_12

Advertisements

மெய்ஞ்ஞானம்

கர்த்தர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார். – நீதிமொழிகள் 2:7

இந்த வசனத்தில் நாம் தியானிக்க வேண்டிய இரண்டு காரியங்கள் உண்டு. கர்த்தர் நீதிமான்களுக்கு மெய்ஞ்ஞானத்தைத் தந்திருக்கிறார் என்று சொல்லப்படவில்லை. அவர்களுக்காக மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார். நமக்கு ஞானம் வேண்டும் என்றால், அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இதைத்தான் யாக்கோபு சொல்கிறார்.

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். – யாக்கோபு 1:5

அப்படியென்றால் நாம் மெய்ஞ்ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். கேட்கிறவனே பெற்றுக்கொள்வான். இந்த நாளிலே அதற்காக ஜெபிக்கலாம்.

இரண்டாவது காரியம், மெய்ஞ்ஞானமானது நீதிமான்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கல்வாரி சிலுவையண்டையில் வந்து, கிறிஸ்து இயேசுவையே நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது, நீதிமான்கள் ஆகிறோம். ஏனென்றால் கிறிஸ்து இயேசு தாம் தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். – 1 கொரி. 1:31

ஆகவே அண்டிவருவோம் நம் இயேசுவண்டை. அவரை, மெய்ஞ்ஞானத்தை, பிதாவினிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

நீதி 2_7

செவிகொடுங்கள்

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். – நீதிமொழிகள் 1:33

நீதி 1_33

இந்த ஜூன் மாதம் முதல் நாளன்று கர்த்தர் சொல்லுகிறார்: எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

நாம் அவருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும்போது, மூன்று காரியங்களைக் கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார்.

1. நீங்கள் விக்கினங்கள் இல்லாத வாழ்க்கை வாழும்படி செய்வார்.
2. ஆபத்திற்குப் பயப்படாத ஒரு வாழ்க்கை வாழ்வீர்கள். மரண இருளின் பள்ளத்தாக்கிலும், நீங்கள் பொல்லாப்புக்குப் பயப்படாதிருப்பீர்கள். சிங்கம்போல் தைரியமாய் இருப்பீர்கள்.
3. அமைதியாய் இருப்பீர்கள். எதைக் குறித்தும் மனம் சஞ்சலப்படாத வாழ்க்கை வாழ்வீர்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக்கு செவி கொடுப்போம். கர்த்தர் அப்படியே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.