சுகம் தான்!

அவள்: சுகந்தான் என்று சொல்லி… – 2 இராஜாக்கள் 4:26

இந்த சூனேமியாளுடைய ஒரே மகன் இறந்து விட்டான். ஆனால் அவள் புருஷன் கேட்கும்போது, எல்லாம் சரியாயிருக்கிறது என்று சொல்கிறாள். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனாகிய கேயாசி விசாரிக்கும்போதும், சுகந்தான் என்று சொல்கிறாளே அல்லாமல், தன்னுடைய உள்ளத்தின் துக்கங்களை அவள் சொல்லவில்லை.

அதனால் அவள் உள்ளத்தில் துக்கமோ, துயரமோ இல்லாமல் இல்லை. எலிசா சொல்கிறார்: அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது என்று (2 இராஜாக்கள் 4:27). ஆனால் தனக்கு ஓர் ஆசீர்வாதமாய் ஒரு பிள்ளையைக் கொடுத்த கர்த்தர், அந்த ஆசீர்வாதம் வீணாய்ப்போக விடமாட்டார் என்று அவள் விசுவாசித்தாள்; அந்த விசுவாசத்தை அறிக்கையாகச் செய்தாள். அவள் வார்த்தையின்படியே, அவள் வாழ்க்கை சுகமாய் மாறிற்று.

எனக்குப் பிரியமானவர்களே! இந்த 11 மாதங்கள் உங்களுக்கு எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது. ஆனால் இந்த 12 மாதத்திற்குள் நீங்கள் நுழைந்திருக்கும் இந்த வேளையில், பரலோகத்தில் இருக்கும் நம்முடைய நல்ல பிதா உங்களை நோக்கிப் பார்க்கிறார். உங்கள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறதைக் காண்கிற பரம பிதா, உங்கள்மேல் மனதுருகி, உங்களிடம் சொல்கிறார்: சுகம் தான். ஆமென்.

விசுவாசியுங்கள். சுகம் தான்! இதுவே இந்த 12-ஆம் மாதம் முழுவதும் உங்களுடைய விசுவாச அறிக்கையாய் இருக்கட்டும். சகல ஆறுதலின் தேவன் இந்த மாதத்தில், எல்லாவற்றையும் உங்களுக்கு சுகமாய் மாற்றித் தருவாராக. நீங்கள் பட்ட ஒவ்வொரு உபத்திரவத்தையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களையும், தோல்விகளையும், உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளையும் கூட கர்த்தர் வெற்றியாக, ஜெயமாக மாற்றித் தருவாராக. இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை வழிநடத்தும் விதத்தைக் காண்கின்ற யாவரும் உங்களைக் குறித்து சொல்லட்டும்: சுகம் தான். நம்ம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

2 இராஜாக்கள் 4_26