கல்லுகள் கூப்பிடட்டும்

இந்த நாட்களில் அநேக இடங்களில் துதி ஆராதனைகள் நடக்கின்றன. அதைப் பார்க்கின்ற அநேக “நல்ல கிறிஸ்தவர்கள்” கேட்கிற கேள்வி இதுதான். இப்படி எல்லாம் சத்தமாக ஆராதித்து விட்டால், கர்த்தர் உன் ஜெபத்தைக் கேட்டுவிடுவாரா? உன் வாழ்க்கையில் மாற்றங்கள் எங்கே? மாற்றங்கள் இல்லாமல் இருக்கும் உன் ஆராதனையை எப்படி கர்த்தர் அங்கிகரிப்பார்?

pointing-to-the-cross

அநேக முறை என்னிடத்தில் கேட்டிருக்கிறார்கள் – உங்கள் சபை விசுவாசிகள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களுடைய ஆராதனையை, துதிகளை கர்த்தர் எப்படி அங்கிகரிப்பார்? அவர்களைத் திருப்தியாக்கி அனுப்புவதை தான் நீங்கள் செய்கிறீர்கள்.

சிற்சில வேளைகளில் நன்றாக ஆராதிக்கிற “நல்ல” கிறிஸ்தவர்கள் ஆராதனை நேரத்தில் கோபமாக, பாடாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், “அப்படிப்பட்ட” கிறிஸ்தவர்கள் இப்படி சத்தமாக பாடும் இந்த ஆராதனையில் நான் எப்படி தேவனைப் பாடுவது என்று.

ஆனால் நான் இதை வேறு விதமாகப் பார்க்கிறேன். பாவம் செய்யாத மனிதர்கள் இல்லை. நம் எல்லாருக்குள்ளும் பாவம் இருக்கிறது. ஒருவேளை ஒரு சிலர் செய்கிறது போல நாம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக நமக்குள் பாவம் இருக்கிறது. அவர்களைக் காட்டிலும் நான் பரிசுத்தவான்; ஆகவே தேவன் என் ஆராதனையை அங்கிகரிப்பார் என்று நான் நினைத்தால், நான் ஆராதிக்கிற தேவனுடைய பரிசுத்தத்தைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றே அர்த்தம். நான் எள்ளளவும் பாவமில்லாத பரிசுத்த ஜீவியம் வாழ்ந்தாலும், கர்த்தருடைய பரிசுத்த சந்நிதியில் வந்து நின்று, அவரை ஆராதிக்க, துதிக்க நான் தகுதியற்றவன்.

அப்படி என்றால் நான் எந்த தைரியத்தில் அவர் சமூகத்தில் வந்து நிற்கிறேன்? குரலை  உயர்த்தி  ஆராதிக்கிறேன்? ஒரே ஒரு நம்பிக்கைதான்.

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
– வெளிப்படுத்திய விசேஷம் 1:6

இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் என் பாவங்களை கழுவி, என்னை பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நிறுத்துகிறதினாலே மாத்திரமே நான் நிற்கிறேன். அதே சமயம், என்னைக் கழுவின அதே இரத்தம் தான் ஒவ்வொரு விசுவாசியையும் கழுவி இருக்கிறது. “தகுதியற்றவர்கள்” என்று முத்திரை குத்தப்படுகிற அந்த கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தான் கழுவப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும், அவருடைய கிருபையையும் குற்றப்படுத்த நான் யார்?

அப்படியென்றால், எப்படி வேண்டுமானால் வாழ்ந்து கொள்ளலாம், ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் வந்து சத்தமாக பாடினால் போதும் என்று நான் சொல்கிறேனோ? இல்லவே இல்லை; அப்படி ஒரு காரியம் எனக்கு தூரமாக இருப்பதாக. நான் கேட்பது எல்லாம், உங்களுக்கு ஆராதிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போது, உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தேவனை மகிமைப்படுத்துங்கள். ஆராதனை நேரத்தில் உங்கள் சரீரங்களை ஜீவபலிகளாக ஒப்புக்கொடுங்கள்; அவருடைய அன்பும், இரக்கமும், கிருபையும் என்னதென்று உணருங்கள்; கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப்பாருங்கள்; இயேசு கிறிஸ்து எவ்வளவு பெரியவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று உலகமெங்கும் குருத்து ஞாயிறு கொண்டாடுகிறார்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை பாடிக்கொண்டு, தேவனை உரத்த சத்தமாய் மகிமைப்படுத்திக் கொண்டு செல்கிறார்கள். அந்த கூட்டத்தில் எத்தனை பரிசுத்தவான்கள் இருந்தார்கள்; பாவிகள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இயேசு அவர்களுடைய ஸ்தோத்திரங்களை, துதிகளை ஏற்றுக்கொண்டார். பரிசேயர்கள் அவர்களைத் தடுத்த நிறுத்த சொன்னபோது, ஆண்டவர் சொல்கிறார்: “இவர்கள் கூப்பிடாவிட்டால், இந்த கல்லுகளே கூப்பிடும்.”

லூக்கா 19_40

ஆனால் ஒரு காரியம் பாருங்கள். கண்டிப்பாக இந்த நாட்களில் அநேக பிரசங்கிகள் கண்டிப்பாக சொல்லிக் காண்பிப்பார்கள் – அதே கூட்டம் இன்னும் சில நாட்கள் கழித்து, “அவனை (இயேசுவை) சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். இது ஒருவேளை அவர்களுக்கு அந்த நாளில் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியாதா? அப்படி என்றால், ஏன் அவர்களை அவர் வெறுக்கவில்லை? ஏன் ஏற்றுக்கொண்டார்? வெளிவேடக்காரர்கள், மாய்மாலக்காரர்கள் என்று ஏன் கடிந்து கொள்ளவில்லை?

ஏனென்றால், அவர்கள் இன்னும் சில நாட்களில் என்ன செய்வார்கள் என்று மாத்திரம் அல்ல, அன்றிலிருந்து 50 நாள் கழித்து என்ன செய்வார்கள் என்றும் இயேசுவுக்குத் தெரியும். பெந்தேகொஸ்தே தினத்தன்று, “நீங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள்” என்று பேதுரு அவர்களைப் பார்த்து சொல்லும்போது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் எடுத்து, ஆதி கிறிஸ்தவ சபையின் முதல் உறுப்பினர்களாய் அவர்கள் மாறுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆம், தேவ பிள்ளையே, நமக்குள் ஆயிரம் குறைகள், தவறுகள், ஏன் பாவங்கள் கூட இருக்கலாம். ஆனால் ஆராதனை நேரங்களில் அதிலே உழன்றுக்கொண்டிராமல், முழு இருதயத்தோடும் கர்த்தரை மகிமைப்படுத்துவோம்; முழு பெலத்தோடு நம் சிருஷ்டிகரைத் துதிப்போம். ஒரு நாள் அவர் நம்மோடு நிச்சயமாய்ப் பேசுவார்; அவருடைய மென்மையான அன்பு நம் குறைகளை நம்முடைய இருதயத்திற்கு உணர்த்தும்; கர்த்தருடைய ஆவியானவர் மனந்திரும்புதலுக்கு நேராக நம்மை நடத்துவார்; பரம குயவன் நம்மை மீண்டும் வனைந்து, குறைகளை எல்லாம் நீக்கிப்போட்டு, நம்மை உருவாக்குவார். ஆகவே, அவரை ஆராதிப்போம்; முழு உள்ளத்தோடு அவரை மகிமைப்படுத்துவோம்; முழு பெலத்தோடு அவரை துதிப்போம். துதிகளில் வாசம்பண்ணுகிற தேவன் நம்மில் வாசம்பண்ணுவாராக. ஆமென்.

christian-wallpaper-praise-lord.jpeg